நாட்டு துப்பாக்கியை போட்டு வேட்டை கும்பல் தெறித்து ஓட்டம்
மேட்டுப்பாளையம்: சிறுமுகை வனப்பகுதியில் தேடுதல் வேட்டைக்கு சென்ற வனத்துறையினரை பார்த்ததும், வேட்டை கும்பல் தப்பி ஓடியது. அவர்கள் விட்டுச்சென்ற நாட்டு துப்பாக்கியை வனத்துறையினர் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகம் மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக, 11 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பை கொண்டதாக உள்ளது. இங்கு மான் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி, சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பல் நடமாட்டம் உள்ளதாக வனத்துறையினருக்கு தெரியவந்தது.இரும்பறை பகுதியில் வேட்டை கும்பல் பதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, வனத்துறையினர் அங்கு சென்றனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த வேட்டை கும்பலை சேர்ந்த, ஐந்து பேர் வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓடினர். உடனே வனத்துறையினர் அவர்களை விரட்டிச் சென்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் மாயமானார்கள்.தப்பி ஓடிய அவசரத்தில் வேட்டைக் கும்பல் தோட்டாவுடன் கூடிய நாட்டு துப்பாக்கியை அங்கேயே விட்டு சென்றனர். அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதை சிறுமுகை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.இதையடுத்து தப்பிச் சென்ற வேட்டைக் கும்பலை போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.