ஆறுபடையான் நிகழ்த்திய அதிசயங்கள்
பல ஆண்டுகளுக்கு முன், ராமேஸ்வரம் ரயிலில் சென்ற தம்பதியினர், தவறுதலாக கிணத்துக்கடவு பகுதியில் இறங்கினர். எங்கு செல்வதென்று தெரியாமல் பொன்மலை கோவிலுக்கு வந்தனர்.அவர்களில், கணவருக்கு கண் பார்வை இல்லை. மனைவி மட்டும் கோவில் அடிவாரத்தில் பூ கட்டி சுவாமிக்கு வழங்கி வந்தார். இவர்கள் இருவரும் கோவில் அடிவாரத்தில் பல மாதங்கள் தங்கியிருந்தனர்.தினமும் பூ கட்டி அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்தனர். மீதம் உள்ள பணத்தை கோவில் உண்டியலில் செலுத்தி சுவாமியை வழிபட்டனர். ஒரு நாள் இந்த தம்பதியினர் மலை மீது ஏறி முருகனை தரிசனம் செய்யும் போது, அவருக்கு கண் பார்வை கிடைத்ததாக கூறப்படுகிறது.அதேபோன்று, சேலம் ஆத்துார் பகுதியை மூதாட்டி ஒருவருக்கு கூன் விழுந்திருந்தது. பெரிதும் பாதிக்கப்பட்ட அவர் பொன்மலை கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வேண்டிய பின், அவருக்கு கூன் நிமிர்ந்து ஆரோக்கியமானதாக கூறப்படுகிறது.இதே போன்று உடல் உபாதைகள் மற்றும் நோய்களுடன் வந்த பக்தர்கள் பலர், கோவிலில் வேண்டுதல் வழிபாடு செய்துள்ளனர். வேண்டுதல் நிறைவேறியதும், குன்றின் மேல் பாதம் வெட்டி நேர்த்திக்கடன் செய்துள்ளனர்.கோவிலில், சுவாமி பாதத்தில் தங்கள் ஜாதகங்களை வைத்து தரிசித்து செல்கின்றனர். இவ்வாறு செய்தால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் பலர் வேண்டுதல் வைத்து வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.முக்கிய விசேஷ நாட்களான, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை போன்ற நாட்களில் பக்தர்கள் கோவிலில் சஷ்டி பாராயணம் செய்து, கிரிவலம் வந்து சுவாமியை தரிசிக்கின்றனர்.இக்கோவிலில், கடந்த, 1954ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நடிப்பில் வெளிவந்த 'மலைக்கள்ளன்' என்ற படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது. கோவிலில், எம்.ஜி.ஆர்., சுவாமி தரிசனம் செய்துள்ளார்.ஆண்டு தோறும், தைப்பூச நிகழ்ச்சியன்று மூன்று நாள் தேரோட்டம் மிகச்சிறப்பாக நடக்கும். கடைசியாக, 2016ம் ஆண்டு தேரோட்டம் நடந்தது. அதன்பின் மேம்பாலம் கட்டப்பட்டதால் தேரோட்டம் நடக்கவில்லை.தற்போது கோவிலில், திருப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடந்த பின், மீண்டும் தேரோட்டம் துவங்கும் என, பக்தர்கள் காத்திருக்கின்றனர்.