சூலுார்;'தேவர்கள், மனிதர்கள் மட்டுமில்லாமல் பறவைகள், விலங்குகளுக்கும் மோட்சத்தை தருவது ராம நாமம் ஆகும்,'' என, பத்திரிகை ஆசிரியர் நம்பி நாராயணன் பேசினார்.சூலுார் அடுத்த முத்துக்கவுண்டன்புதுார், சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், 'நமது தேசம் புண்ணிய தேசம்' என்ற தலைப்பில் மாதாந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இயக்க தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.ராம பிரானின் அருங்குணங்கள் என்ற தலைப்பில், 'ஒரே நாடு' பத்திரிகை ஆசிரியர் நம்பி நாராயணன் பேசியதாவது: மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என, உலகுக்கே வழிகாட்டுவது ராமாவதாரம். தாயிற் சிறந்த கோவிலுமில்லை; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வாழ்ந்தவர். தன்னுடைய தாய் கோசலையிடம் வளர்ந்ததை விட, கைகேயியிடம் தான் அதிகம் வளர்ந்தார். உனக்கு பட்டாபிஷேகம் என தசரதன் கூறியவுடன், கைகேயியிடம் தான் முதலில் ஆசி பெற்றார் ராமர். அந்தளவுக்கு அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்.மனைவி சீதா, சகோதரர்கள் பரதன், லட்சுமணனிடம் காட்டிய அன்பு அளவில்லாதது. ராவணனின் தம்பியான விபீசணன் அடைக்கலம் கேட்டபோது, மறுப்பேதும் கூறாமல், சந்தேகம் கொள்ளாமல் ஏற்றுக்கொண்டவர் ராமன். ஜடாயுவுக்கும், அணிலுக்கும், அனுமனுக்கும் அன்பு காட்டி, அருள் பாலித்தவர் ராமர். அருங்குணங்களை கொண்ட ராம பிரானின் வாழ்க்கை முறைகள், நம் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டுவது ஆகும். தேவர்கள், மனிதர்கள் மட்டுமில்லாமல் பறவைகள், விலங்குகளுக்கும் ராம நாமம் மோட்சத்தை அளிக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.