அன்னுார்:அன்னுாரில் கைகாட்டியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, கோட்ட பொறியாளர் உத்தரவு பிறப்பித்தார்.கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையம், அன்னுார், புளியம்பட்டி வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இந்நிலையில் நேற்று கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி, மாநில நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் மணிவண்ணன், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணை தலைவர் விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் கைகாட்டியில் ஆய்வு செய்தனர்.கோவை, மேட்டுப்பாளையம், ஓதிமலை சாலை மற்றும் மெயின் ரோட்டில் இருந்து நிமிடத்திற்கு எவ்வளவு வாகனங்கள் வருகின்றன என்பதை கணக்கிட்டனர். கைகாட்டியில் சாலையின் அகலம் அளவீடு செய்ததில் 23 மீ., இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து கைகாட்டியில், சோதனை அடிப்படையில், மணல் மூட்டைகளை அடுக்கி, பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை செல்லும் வாகனங்கள் ரவுண்டானாவுக்கு கிழக்கே சுற்றிச்செல்லும் படியும், கோவையிலிருந்து அன்னுார் வரும் வாகனங்கள் ரவுண்டானாவுக்கு மேற்கே செல்லும்படியும் மாற்றம் செய்யப்பட்டது.இது குறித்து கோட்ட பொறியாளர் மனுநீதி கூறுகையில், கைகாட்டியை வாகனங்கள் சுற்றிச்செல்வதில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கைகாட்டியில் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் வாகனங்கள் செல்வதில் ஏற்பட்ட மாற்றத்திலும் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.போலீசார், கடை உரிமையாளர்களிடம், கடைகளுக்கு வெளியே வாகனங்களை தாறுமாறாக நிறுத்தாதபடியும், தார் ரோட்டில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும், ஏ -ஒன் கார்னரில் உள்ள கடைகளுக்கு வெளியே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படியும் அறிவுறுத்தினர்.