உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை; அத்திக்கடவு ஆய்வு கூட்டத்தில் புகார்

குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை; அத்திக்கடவு ஆய்வு கூட்டத்தில் புகார்

அன்னுார்; 'அனைவரும் ஒத்துழைப்பு அளித்தால் அனைத்து குளங்களும் நிரம்பும்,' என ஆலோசனைக் கூட்டத்தில் நீர் வளத்துறை பொறியாளர் தெரிவித்தார்.அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில், சில குளங்களில், ஓ.எம்.எஸ்., கருவி, சோலார் பேனல், ஸ்டெய்னர் ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இத்திட்டத்தில் பயன்பெறும் ஒன்றியங்களில் தன்னார்வலர்களுடன் இணைந்து கூட்டம் நடத்த அரசு அறிவுறுத்தியது.இதன்படி அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முத்துசாமி பேசுகையில், ''கோவை மாவட்டத்தில் 243, திருப்பூர் மாவட்டத்தில் 385, குட்டைகளில் ஓ.எம்.எஸ்., கருவி, சோலார் பேனல், ஸ்டெய்னர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.ஆனால், சில இடங்களில் இவை சேதப்படுத்தப்பட்டு விட்டன. 1045 குளம், குட்டைகளிலும், ஓ.எம்.எஸ்., உள்ளிட்ட கருவிகளை ஒப்பந்த நிறுவனமோ, நீர்வளத் துறையோ பாதுகாப்பது கடினம். ஊராட்சி நிர்வாகங்கள், தன்னார்வலர்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.சில இடங்களில் கருவிகள் சேதப்படுத்தப்பட்டதால், குளம், குட்டைகளுக்கு தண்ணீர் செல்வதில்லை. இக்கருவிகளை பாதுகாப்பதில் அனைவரும் ஒத்துழைத்தால், அனைத்து குளம், குட்டைகளும் நிரம்பும்,'' என்றார்.கவுசிகா நீர் கரங்கள் அமைப்பின் தலைவர் செல்வராஜ் பேசுகையில், ''தங்களது அமைப்பு சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்,'' என்றார்.அல்லப்பாளையம் ஊராட்சித் தலைவர் வெங்கிடுபதி பேசுகையில், ''எங்கள் ஊராட்சியில், எட்டு குளங்கள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், வெறும் ஐந்து சதவீதம் நீர் மட்டுமே வந்துள்ளது. 95 சதவீதம் குளங்கள் மைதானம் போல் காட்சியளிக்கிறது.குளத்திற்கு வரும் வழியில் குழாய்களில் நீர்க்கசிந்து வீணாக பள்ளத்தில் செல்கிறது,'' என்றார்.இதேபோல், பசூர், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சிகளிலும் குளம் குட்டைகளுக்கு முழுமையாக அத்திக்கடவு நீர் வரவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உமாசங்கரி, ரவீந்திரன் ஆகியோர், 'ஊராட்சி நிர்வாகங்கள், இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்,' என்றனர்.அத்திக்கடவு திட்ட உதவி பொறியாளர்கள், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ