மனித நேயத்தை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக இருக்கணும்! கிருஷ்ணராஜ் வாணவராயர் பேச்சு
பொள்ளாச்சி : 'மனித நேயத்தை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்,' என, என்.ஜி.எம்., கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார்.பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் அருட்செல்வர் மகாலிங்கத்தின், 10ம் ஆண்டு நினைவேந்தல் விழா நடந்தது. சக்தி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மாணிக்கம், என்.ஜி.எம்., கல்லுாரி செயலர் பாலசுப்ரமணியம், சாமுண்டேஸ்வரி சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் (பொ) மாணிக்கச் செழியன் வரவேற்றார்.கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்து பேசுகையில், ''வாழ்வாங்கு வாழ்ந்து சரித்தரம் படைத்த மாமனிதர்களை என்றும் மறக்க கூடாது. நினைவேந்தல் நிகழ்ச்சி என்பது புகழுடன் வாழ்ந்து மறைந்தவர்களுக்கு புகழ் சேர்ப்பது அல்ல; இந்நிகழ்வு இன்றைய தலைமுறையினர், அவரை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது.கடந்த, 70 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய கல்வி குழுமத்தை தோற்றுவித்த மாமனிதர் அருட்செல்வரை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். மனித நேயத்தை உருவாக்குவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்,'' என்றார்.'அருட்செல்வர் தி லெஜனட்' என்ற நுாலை, ஏ.வி., குழுமத்தின் தலைவர் வரதராஜன் வெளியிட, ஈரோடு யு.ஆர்.சி., குழுமத்தின் நிர்வாக இயக்குனர் தேவராஜன் பெற்றுக்கொண்டார்.பி.ஏ.பி., திட்டத்தில் அருட்செல்வர் மகாலிங்கத்தின் பங்களிப்பு, கல்விக்காக ஆற்றிய அரும்பணிகள் என அவரது சேவைகள், பணிகள் குறித்து விளக்கப்பட்டது. கல்லுாரியின் முன்னாள் பொருளாதாரத்துறை தலைவர் பத்பநாபன், 'அருட்செல்வர் தி லெஜன்ட்' என்ற புத்தகம் பற்றி விளக்கினார். குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர் சங்கர் வாணவராயர் மற்றும் குடும்பத்தினர், துறை தலைவர்கள் பங்கேற்றனர்.