உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோடெல்லாம் படுமோசமா இருக்கு; ரூ.110 கோடி எங்கே போச்சு! நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்; வாகன ஓட்டிகள் அவஸ்தை

ரோடெல்லாம் படுமோசமா இருக்கு; ரூ.110 கோடி எங்கே போச்சு! நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்; வாகன ஓட்டிகள் அவஸ்தை

கோவை; கோவை மாநகர பகுதியில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ரோடுகளை சீரமைக்க, 110 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் அவஸ்தைப்படுகின்றனர்.கோவையில், 24 மணி நேர குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் காஸ் குழாய் பதிப்பு மற்றும் தொலைத்தொடர்பு துறை ஒயர்கள் மற்றும் மின் புதை வடம் பதிக்க, நகரெங்கும் ரோடுகள் தோண்டப்பட்டு உள்ளன.தோண்டிய ரோடுகளை சரிவர மூடாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் அவஸ்தைப்படுகின்றனர்.மாநகர பகுதிகளில் சாலைகளை சீரமைப்பது தொடர்பாக, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம் அதிகாரிகளுடன், மே மாதம், 28ம் தேதி கலெக்டர் ஆலோசித்தார். போர்க்கால அடிப்படையில், கணபதியில் இருந்து மணியக்காரன்பாளையம் வழியாக கணுவாய் சாலை, துடியலுார்- - மருதமலை சாலையை சீரமைக்க முடிவெடுக்கப்பட்டது; உடனடியாக, சாலை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டது. சாலைகளை மறுசீரமைப்பு செய்ய, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு, 110 கோடி ரூபாயை மாநகராட்சி வழங்கியது. ஆனால், ரோடு போடும் பணியை நெடுஞ்சாலைத்துறை இன்னும் துவக்காமல் இருப்பதால், வாகன ஓட்டிகளின் அவஸ்தை தொடர்கிறது.மேட்டுப்பாளையம் ரோடு ஜி.என்.மில்ஸ் அருகே கொங்குநாடு கல்லுாரி முன் குழியில் நேற்று ஒரு லாரி புதைந்தது. துடியலுார் - வடவள்ளி ரோடு, கணபதி பாரதியார் ரோடு, மணியகாரன்பாளையம் ரவீந்திரநாத் தாகூர் ரோடு, மணியகாரன்பாளையம் - கணபதி ரோடு மற்றும் விளாங்குறிச்சி ரோடு விநாயகபுரம் பகுதியில் ரோடுகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'எங்களது கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை நன்றாக பராமரிக்கிறோம். மாநகராட்சியில் இருந்து குழியை தோண்டி குதறி விடுகிறார்கள். அதற்கு பின், ரோடு மோசம் என புகார் கூறுகின்றனர். குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு ரோடு பழுதடைகிறது; அதை விரைந்து சரி செய்வதில்லை. விளாங்குறிச்சி விநாயகபுரம் பகுதியில் தற்காலிக ஏற்பாடாக, 'வெட்மிக்ஸ்' கொட்டி நிரப்பப்படும். விரைவில் ரோடு போடப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ