உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சியில் 8 ஆண்டு பிரச்னைக்கு வந்தது தீர்வு

மாநகராட்சியில் 8 ஆண்டு பிரச்னைக்கு வந்தது தீர்வு

கோவை ; கோவை சாயிபாபா காலனியை சேர்ந்த, 66 வயதான நடராஜன் என்பவர், ஆக., மாதம் மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் ரங்கநாயகி தலைமையில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், மனு கொடுத்தார்.அம்மனுவில், '44வது வார்டு சாயிபாபா காலனி, கே.கே.புதுார், ராமலிங்க நகர் நான்காவது தெருவில், 'மருதம் பாக்கியா அடுக்குமாடி குடியிருப்பு'க்கு எதிர் சாலையில், 500 மீட்டர் துாரத்துக்கு ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறது. புதிதாக ரோடு போட்டுக் கொடுங்கள். தயவு செய்து பதில் மட்டும் கொடுக்காதீங்க; ரோடு போட்டுக் கொடுங்கள்' என, மன்றாடி கோரிக்கை விடுத்தார்.பொறியியல் பிரிவு அதிகாரிகள் அம்மனுவை பரிசீலித்து, 'அடுத்த நிதியாண்டில், நிதி ஒதுக்கி, ரோடு போட்டுத் தரப்படும்' என, கூறியிருக்கின்றனர்.மொத்தம், 500 மீட்டர் துாரத்துக்கு ரோடு போடுவதற்கு, எட்டு வருடங்களாக போராடி வரும் நடராஜன், நேற்றைய தினம் சரவணம்பட்டியில் நடந்த 'மக்களைத்தேடி மாநகராட்சி' முகாமிற்கு நேரில் சென்றார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை நேரில் சந்தித்து, மீண்டும் முறையிட்டார்.தமிழக அரசு ஒதுக்க உள்ள சிறப்பு நிதி ரூ.200 கோடி திட்டத்தில், அவ்வீதியை சேர்க்க உத்தரவிட்ட கமிஷனர், தற்காலிகமாக அப்பகுதியில் 'பேட்ச் ஒர்க்' செய்ய, பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தினார். அப்பணி நடக்கிறதா என்பதை நேற்றிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, கமிஷனரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !