போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடி சுட்டு பிடித்தார் சப் - இன்ஸ்பெக்டர்
கோவை:குமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆல்வின், 40; இவர் மீது மூன்று கொலை, நான்கு கொலை முயற்சி உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன.கடந்த, 2020ல் பிஜூ என்பவர் கொலை வழக்கில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியபாண்டி என்பவரை போலீசார் சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த அவர், டிரைவர் வேலை பார்த்து வந்தார். தலைமறைவு
இந்நிலையில், 2023 பிப்., மாதம், பிஜூ தரப்பினர் பழிக்குப்பழியாக பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வைத்து, சத்தியபாண்டியை வெட்டி கொலை செய்தனர். இவ்வழக்கில் ஆல்வின் கைது செய்யப்பட்டார்.ஜாமினில் வந்த ஆல்வின் தலைமறைவானார். சில மாதங்களுக்கு முன், போலீசார் அவரை பிடிக்க போலீசார் சென்றபோது, சினிமா பாணியில் ஒரே மாதிரியான 10 கார்களில் வந்து, போலீசாரை குழப்பி தப்பினார். பல்வேறு மாநிலங்களில் தலைமறைவாக இருந்து வந்தார்.இதனிடையே, ஆல்வினை பழிவாங்க சத்தியபாண்டி தரப்பு காத்திருந்ததாக சொல்லப்படுகிறது.இதையறிந்த ஆல்வின், கொடிசியா மைதானம் அருகே உள்ள பகுதியில் வேறு திட்டத்துடன் பதுங்கியிருப்பதாக ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார், ஆல்வினை நேற்று அதிகாலை பிடிக்கச் சென்றனர்.அப்போது, ஆல்வின் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசாரை குத்தினார். தலைமை காவலர் ராஜ்குமார் கையில் காயம் ஏற்பட்டது. மற்ற போலீசாரையும் தாக்க முயற்சித்தபோது, எஸ்.ஐ., கார்த்திகேயன் தன் துப்பாக்கியால் மூன்றுமுறை அவரை நோக்கி சுட்டார். இதில், இரண்டு குண்டுகள் ஆல்வினின் இரு கால் முட்டிகளில் பட்டது. குண்டடிபட்ட ஆல்வின் ஓட முடியாமல் சரிந்தார். 600 பேர்
போலீசார், ஆல்வினை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, வேறு ஏதாவது கொலைக்கு திட்டம் தீட்டினாரா, ஆல்வின் கூட்டாளிகள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''கோவையில் 600 பேர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக உள்ளனர். அனைவரையும் கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.