தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்து விட்டது; எம்.எல்.ஏ., ஜெயராமன்
பொள்ளாச்சி; 'தீய சக்தி தி.மு.க., வை வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்து விட்டது. இதற்கு, நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றி அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்ய வேண்டும்,'' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். பொள்ளாச்சியில் அ.தி.மு.க., - பா.ஜ., - த.மா.கா., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், பங்கேற்ற எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்த அப்போதைய முதல்வர் பழனிச்சாமி, கேரளா முதல்வரிடம் பேச்சு நடத்தினார். அதை தொடர்ந்து, இருமாநில அதிகாரிகள் குழுக்கள் அமைக்கப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சி தொடர்ந்து இருந்தால், ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கும். அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்தியதால் தற்போது அங்குள்ள குளம், குட்டை, தடுப்பணைகள் நீர் வரத்துள்ளது. விவசாயம் செழித்து வருகிறது. அதே போன்று, ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்தி இருந்தால், நமது பகுதி செழிப்பாக மாறி இருக்கும். மக்கள் விரோத, தீய சக்தியான தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது. மக்கள், தி.மு.க., ஆட்சி மீது விரக்தியாக உள்ளனர். மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தமிழக மக்களின் நிலை பாதிக்கப்படும். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டி, தமிழக முதல்வராக பழனிச்சாமி வர, நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.