பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு போனது... காற்றோடு! ஆனாலும் புறநகரில் 4 வழக்கு மட்டுமே பதிவு
கோவை:தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என அரசு உத்தரவிட்ட நிலையில், நள்ளிரவிலும் தொடர்ந்த வெடி சத்தத்தால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று மாசுபடுகிறது; அதிக ஒலி மற்றும் காற்று மாசால் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பதால், பசுமை பட்டாசு உற்பத்தி செய்து விற்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை, 2018ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தது. அதன் அடிப்படையில், தீ பாவளியன்று காலை 6 முதல் 7 வரை, இரவு 7 முதல் 8 வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என, தமிழக அரசு அறிவித்தது. இந்த விதியை மீறினால், சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்படும் என அரசாணை தெரிவித்தது. ஆனால், தீபாவளிக்கு சில நாட்கள் முன்னரே பட்டாசு வெடிக்க ஆரம்பித்தவர்கள், தீபாவளி அன்று உச்சகட்டமாக, நேர கட்டுப்பாடுகளை மீறி இடைவிடாமல் வெடித்ததால் பெரும்பாலான பகுதிகளில், மக்கள் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகினர். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது; குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது என்ற விதியும் காற்றில் பறந்தது. கோவையில், இது தொடர்பாக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.புரம், காட்டூர், ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, ரத்தினபுரி, கவுண்டம்பாளையம், துடியலுார், செல்வபுரம், சிங்காநல்லுார், பீளமேடு, சரவணம்பட்டி ஸ்டேஷன்களில் தலா இரு வழக்குகள் பதியப்பட்டன. வடவள்ளி, குனியமுத்துார் ஸ்டேஷன்களில் தலா ஒரு வழக்கும், அதிகபட்சமாக, ராமநாதபுரம், போத்தனுார், சுந்தராபுரம் ஸ்டேஷன்களில், தலா நான்கு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இவற்றில், 17 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். 17 வழக்குகளில், 'அடையாளம் தெரியாத நபர்கள்' என பதியப்பட்டுள்ளது. இரு வழக்குகளில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தேடப்படுகின்றனர். மொத்த விதிமீறல்களை கணக்கிட்டால், வழக்குகள் எண்ணிக்கை குறைவுதான் என, போலீசாரே ஒப்புக் கொள்கின்றனர். போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால், பட்டாசு சத்தம் கேட்ட இடங்களில் மைக் மூலம் எச்சரித்து இருக்கலாம்; அது நிச்சயம் பலன் அளித்திருக்கும் என, சென்னையில் நடந்ததை சுட்டிக் காட்டி, பலர் கருத்து தெரிவித்தனர். அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்ததாக கோவை புறநகர் மேட்டுப்பாளையம், அன்னுார், கோவில்பாளையம், தடாகம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் தலா ஒரு வழக்கு வீதம் மொத்தம் ௪ வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்கள் கருத்து...3ம் பக்கம்.