ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ட்ரோன் கேமரா பயன்படுத்த தடை; வனத்துறை எச்சரிக்கை
வால்பாறை; ஆனைமலை புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பயணியர் 'ட்ரோன்' கேமரா பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை அமைந்துள்ளது. இங்குள்ள, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகத்திற்கு உட்பட்ட, அட்டகட்டி வியூ பாயின்ட், வாட்டர்பால்ஸ், நல்லமுடி காட்சிமுனை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, கவர்க்கல்வியூ பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணியரின் அத்துமீறலை தடுக்க, வனச்சரக அலுவலர்கள் வெங்கடேஷன், கிரிதரன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர், வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்வதையும், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் 'ட்ரோன்' கேமரா பயன்படுத்துகின்றனரா என்பதையும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையை ரசிக்க வரும் சுற்றுலா பயணியர் தடை செய்யப்பட்ட வனத்திற்குள் அத்துமீறி நுழையவோ, வனவிலங்குகளை துன்புறுத்தவோ கூடாது. மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதால், மாலை, 6:00 மணிக்கு மேல், ஆழியாறு சோதனை சாவடி வழியாக வால்பாறைக்கு இருசக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதியில்லை.வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் இயற்கைக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கண்டு ரசித்து செல்ல வேண்டும்.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட எந்த ஒரு பகுதியிலும் சுற்றுலா பயணியர் 'ட்ரோன்' கேமரா பயன்படுத்தக்கூடாது. மீறினால் அபராதம் விதிப்பதோடு, கேமராவும் பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு, கூறினர்.