பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், நகர மக்களால் 'பெரியகிணறு' என அழைக்கப்பட்ட பொதுக்கிணறு, தற்போது பரிதாப நிலையில் உள்ளது. இதை துாய்மை செய்யக்கூட அக்கறை காட்டாத நகராட்சி நிர்வாகம், நீரை மட்டும் எடுத்து மக்களின் மாற்று பயன்பாட்டுக்கு வழங்குகிறது.பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்களின் பயன்பாட்டுக்காக அம்பராம்பாளையம் ஆற்றில் இருந்து குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மாற்று பயன்பாட்டுக்கு கிணறுகளில் இருந்து நீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், நகர மக்களால், 'பெரியகிணறு' என அழைக்கப்பட்ட பொதுக்கிணறு, பரிதாபமாக காட்சியளிக்கிறது. இந்த கிணற்றை துார்வாரவும், பராமரிக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. குடிநீர் ஆதாரம்
பொள்ளாச்சி நாச்சிமுத்து வீதியில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் பின்புறம், இந்த கிணறு துார்வாரப்படாமல் உள்ளது. இந்த கிணற்றில் இருந்து தான், 70 ஆண்டுகளுக்கு முன், பொள்ளாச்சி முழுதும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பின், கிணறு போதிய பராமரிப்பின்றி உள்ளது.தற்போது, இந்த கிணற்றில் இருந்து தான், கரியகாளியம்மன் வீதி, குட்டை வீதி, நாச்சிமுத்து வீதி மற்றும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நகராட்சி சார்பில் தண்ணீர் (மாற்று பயன்பாட்டுக்காக) வினியோகம் செய்யப்படுகிறது.இந்த கிணற்றில் மீது அமைக்கப்பட்டிருந்த கம்பி வலை துருப்பிடித்து சேதமடைந்து உள்ளது. விஷ பூச்சிகளின் இருப்பிடமாக உள்ளது. புதர் மண்டி காணப்படுவதால், இலை, தழைகள் கிணற்றுக்குள் உதிர்ந்துள்ளது. ஒரு சிலர், குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பல்புகளையும் கிணற்றில் வீசியுள்ளனர்.இதனால், இந்த நீரை பயன்படுத்தும் மக்கள், தோல் நோய்கள், அரிப்பு போன்ற உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு காலத்தில் நகருக்கே குடிநீர் வழங்கிய கிணற்றின் நிலை பரிதாபமாக உள்ளது.இங்கு இருந்து நீரை எடுத்து வினியோகம் செய்யும் நகராட்சிக்கு, இதை பராமரிக்க கூட நேரமில்லாதது வேதனையளிக்கிறது. கோடையில் கைகொடுக்கும்
நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த கிணற்றை துாய்மைப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், பொள்ளாச்சியின் பெரும்பாலான பகுதிகளுக்கு இக்கிணறு நீரை, நகராட்சி நிர்வாகம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.கிணற்றை துார்வாரி, கம்பிவேலி அமைத்து, சுத்தமான நீராக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யலாம்.மேலும், கிணறு பகுதியில் பொதுமக்கள் குப்பை கொட்டாத வகையில், நகராட்சி சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வைத்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பராமரித்தால் பயனளிக்கும்!
ஓய்வு பெற்ற அரசு வட்டார சுகாதார அலுவலர் வேலாயுதம் கூறியதாவது:ஊருக்கு பயன்படுத்திய கிணறு பரிதாபமாக உள்ளதை காணும் போது கவலை அளிக்கிறது. இதுபோன்று, இப்போது கிணறு வெட்டினால் பல லட்சங்கள் செலவாகும்.நகராட்சி நிர்வாகம், கிணறு நீரை சுத்தம் செய்யாமல், அப்படியே வினியோகம் செய்வதால், நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் கிணற்றை துார்வார வேண்டும். அங்குள்ள மரங்களை அகற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.கிணறு அருகே வசிக்கும் பாலசுப்ரமணியன் கூறுகையில், ''கிணறு அருகே புதர் மண்டி காணப்படுவதால், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள், வீட்டுக்குள் வந்து விடுகின்றன. புதரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிணற்றை துார்வாரி பராமரித்தால், பயனாக இருக்கும்,'' என்றார்.