உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பெட்., சி.டி., ஸ்கேன் எடுப்பதால் பக்கவிளைவுகள் இல்லை

 பெட்., சி.டி., ஸ்கேன் எடுப்பதால் பக்கவிளைவுகள் இல்லை

'தி னமலர்' நாளிதழ் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பில், 'நலம் பேசுவோம் - நலமுடன் வாழ்வோம்' என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்வு, மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இம்மாதம் நடந்த 'என்ன செய்யலாம்... புற்று நோய் வரும் முன்... வந்தபின்' என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியி ல், பொதுமக்கள் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும், டாக்டர்கள் அளித்த விளக்கங்களும்.. டாக்டர் கமலேஸ்வரன், நியூக்ளியர் மற்றும் பெட்/சி.டி., ஸ்கேன் புற்றுநோய் பரவும் தன்மை உள்ளதா? புற்றுநோய் பரவும் நோய் அல்ல. அச்சம் கொள்ள தேவையில்லை. மார்பக புற்றுநோய் அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கு, கை வீக்கம் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்? மார்பக புற்றுநோய் நெறிகட்டியில் தான் முதலில் பரவும். அறுவைசிகிச்சையில் நெறிகட்டிகள் அகற்றப்படுவதால், சில ஆண்டுகள் கழித்து கை அதிகம் வீங்குகிறது. இதை 'லிம்பெடிமா' என்று கூறுவோம். நெறிகட்டிகளில் புற்றுநோய் பரவாத சூழலில், இதை தவிர்க்க சென்டினல் நோட் பயாப்ஸி செய்து, இப்பாதிப்பை தவிர்க்க முடியும். கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் இதற்கான நவீன சிகிச்சை வசதிகள் உள்ளன. நியூக்ளியர் மெடிசின் என்பது என்ன? இது, நோய்களை கண்டறியவும் சிகிச்சை அளிக்கவும், குறைந்த அளவு ரேடியோ ஆக்டிவ் பொருட்கள் (radioactive tracers) பயன்படுத்தப்படும் மருத்துவ முறை. இவை உடலுக்குள் சென்ற பிறகு, சிறப்பு ஸ்கேன் கருவிகள் வாயிலாக படங்களை உருவாக்கி, உடல் உறுப் புகளின் செயல்பாடுகளை நேரடியாக பார்க்கலாம். புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிய உதவுகிறது. பெட்., சி.டி., ஸ்கேன் எடுப்பதால் பக்கவிளைவுகள் ஏதும் உள்ளதா? பெட்., சி.டி., ஸ்கேனில் ரேடியேசன் மெடிசின் பயன்படுத்துவதால், ரேடியேஷன் தாக்கம் இரண்டு மணி நேரம் சிலருக்கு இருக்கும். தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை. நியூக்ளியர் மெடிசின் சிகிச்சை என்பது என்ன? நியூக்ளியர் மெடிசின் சிகிச்சை என்பது, நோய்களை குறிப்பாக, தைராய்டு புற்றுநோய் குணப்படுத்த கதிர்வீச்சு மருந்துகளை பயன்படுத்தும் முறையாகும். இந்த மருந்துகள் உடலுக்குள் சென்று, நோயுள்ள செல்களை மட்டும் தாக்கி அழிக்கும். சாதாரண செல்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும். தைராய்டு புற்றுநோய் குறித்து கூறுங்கள்... தைராய்டு என்பது, கழுத்தில் பட்டாம்பூச்சி வடிவில் உள்ள உறுப்பு. தைராய்டில் கட்டி ஏற்படும். சாதாரண கட்டியாகவும் இருக்கலாம்; புற்றுநோய் கட்டியாக இருக்கலாம். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து அறியலாம். அதிலும் சந்தேகம் இருப்பின், எப்.என்.எஸ்.சி.,ஊசி போட்டு அடுத்தகட்ட பரிசோதனைகள் செய்யவேண்டும். புற்றுநோய் இருப்பது உறுதியானால், தைராய்டு சிறப்பு நிபுணர்களை அணுகி அகற்ற வேண்டும். இதன் அறிகுறிகள் என்னென்ன? கழுத்து பகுதியில் வீக்கம், குரல் மாறி பேசுவதில் சிரமம், சில நேரங்களில் மூச்சுவிடுவதில் சிரமம், உணவு விழுங்குவதில் சிக்கல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். 'புரோஸ்டேட் கேன்சரை குண்ப்படுத்தி விடலாம்' டாக்டர் ஆனந்த் நாராயணன், கதிர்வீச்சு புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர் எனக்கு மார்பக புற்றுநோய் உள்ளது, சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறேன். எதுபோன்ற உணவு, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்? மார்பக புற்றுநோய் பொறுத்தவரையில், பல்வேறு துறை மருத்துவர்களை சந்திக்கவேண்டி இருக்கும். முதலில், நேர்மறையான தைரியம் அவசியம்; அதுபோன்ற எண்ணம் கொண்டவர்கள் எளிதாக நலம் பெறுவதை காணமுடிகிறது. சிகிச்சையின் போது உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கவழக்கம் அவசியம். நடைபயிற்சி, உடல் இயக்க பயிற்சி உங்கள் சூழல் பொறுத்து முடிந்த வரை செய்யலாம். நல்ல காய்கறி, பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த வகையான சர்க்கரையாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும். இப்பாதிப்புக்கு இதுதான் உணவு என்று கிடையாது. சத்தான உணவை பொதுவாக எடுத்துக்கொள்ளலாம். டியூமர் மார்க்கர் டெஸ்ட் என்பது என்ன; ஒரு ரத்த பரிசோதனையில் அனைத்து புற்றுநோய் பாதிப்பு விபரங்களையும் அறிய முடியும் என சொல்கின்றார்களே? டியூமர் மார்க்கர் டெஸ்ட் என்பது ரத்தம், சிறுநீர் போன்ற உடல் திரவங்களில் சில குறியீட்டு புரதங்கள், வேதிப்பொருட்களின் அளவை அளந்து, உடலில் புற்றுநோய் இருப்பதையோ, அதன் வளர்ச்சியையோ கண்டறியும் பரிசோதனை. ஒரு சில புற்றுநோய்க்கு இதன் செயல்பாடு நன்றாக இருக்கிறது. ஒரு ரத்தப்பரிசோதனையில் அனைத்து புற்றுநோயும் கண்டறியும் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை முறை சந்தையில் தற்போது இல்லை. அந்தந்த பகுதிக்கு, அதற்கேற்ற பரிசோதனைகள் செய்தால் மட்டுமே உறுதிசெய்ய இயலும். புரோஸ்டேட் புற்றுநோய் என்பது பற்றி தெளிவாக கூறுங்கள்; எனக்கு அறிகுறி உள்ளதாக தோன்றுகிறது. பெரும்பாலும், ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் குறித்து அவர்களுக்கே தெரியாமல், அறிகுறிகளை அலட்சியமாக விட்டு விடுகின்றனர். இந்த வகை புற்றுநோய் ரொம்ப மெதுவாக பரவும் தன்மை கொண்டது. ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் குணப்படுத்தி விடமுடியும். 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள், சிறுநீர் போவதில் சிக்கல், எரிச்சல், இரவு அதிகம் சிறுநீர் கழிக்க தோன்றுவது இதன் அறிகுறி. இதற்கு, பி.எஸ்.ஏ., என்ற பரிசோதனை உள்ளது. இதை செய்து எளிதாக கண்டுபிடிக்க இயலும். பி.எஸ்.ஏ., அதிகம் இருந்தால் இப்புற்றுநோய் இருக்க வாய்ப்புண்டு. அதை தொடர்ந்து சில பரிசோதனைகள் தேவைப்படும். அறிகுறிகளை அலட்சியம் இன்றி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். புற்றுநோய் அறிகுறிகள் பொதுவாக என்னென்ன ? புற்றுநோய் ஒரு அறிகுறி இருக்கும் என கூறமுடியாது. எந்த உறுப்பில் வருகிறதோ அதற்கு ஏற்ப அறிகுறி இருக்கும். உதாரணமாக, ஆறாத புண், தொண்டை, வாய் பகுதியில் இருப்பது, மார்பகத்தில் கட்டி, தொடர்ந்து விழுங்குவதில் சிரமம், இரண்டு வாரத்திற்கு மேற்பட்ட வயிற்றுப்போக்கு, துவாரங்களில் ரத்தம் போதல், ஆறாத புண் என அறிகுறிகள் வேறுபாடும். இவை இருந்தால் புற்றுநோய் என்றும் உறுதியாக கூறமுடியாது. பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தடுப்பு முறை என்று பார்த்தால், 20 சதவீத புற்றுநோய்க்கு புகையிலை, ஆல்ஹால் காரணமாக உள்ளது; இதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை