உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிசி பிசுன்னு இருக்கு! காலை உணவில் ரவா உப்புமா மாற்றி வழங்க வேண்டுகோள்

பிசி பிசுன்னு இருக்கு! காலை உணவில் ரவா உப்புமா மாற்றி வழங்க வேண்டுகோள்

கோவை: முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில், மாணவர்களுக்கு வழங்கப்படும் ரவை உப்புமாவுக்கு பதிலாக வேறு உணவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்க, முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டம் 2022ல் தொடங்கப்பட்டது. அதன்படி, அரிசி உப்புமா, கோதுமை உப்புமா, ரவா உப்புமா, சேமியா காய்கறி கிச்சடி, வெண்பொங்கலுடன் சாம்பார் என சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன. தற்போது வரை இத்திட்டத்தினால், 34,987 துவக்கப்பள்ளிகளில் 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவ - மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்நிலையில், ரவை உப்புமாவுக்கு பதிலாக வேறு உணவு வழங்க, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. சத்துணவு ஊழியர்கள் கூறுகையில், 'வெள்ளை ரவை உப்புமா பிசுபிசுப்பாக இருப்பதால் குழந்தைகள் அதை விரும்பி சாப்பிடுவதில்லை. மொத்தமாகப் பொருட்கள் வழங்கப்படுவதால், அவற்றின் தரம் குறைகிறது. சமைக்கும்போது ரவை பிசுபிசுப்பு தன்மை அடைவதால், மாணவர்கள் அதை தவிர்த்து விடுகின்றனர்' என்கின்றனர். தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'கொண்டக்கடலை போன்ற உணவுப் பொருட்கள் நாள்பட்டால் வண்டுகள் வந்துவிடுகின்றன. அதேபோலத்தான் வெள்ளை ரவையும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது. எனவே, தரமான பொருட்களும், மாணவர்களுக்கு ஏற்ற உணவுப் பொருட்களும் வழங்குவது அவசியம். இந்த கோரிக்கைகள் குறித்து அரசு கவனத்தில் எடுத்து, மாணவர்களின் ஆரோக்கியத்திற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப மாற்றங்களை செய்ய வேண்டும் 'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ