விளையாட்டு போட்டிக்கு தினப்படி இல்லை; அவரவரே செலவு செய்யணும்
பொள்ளாச்சி; விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு, பள்ளியில் இருந்து எந்தவித நிதியும் ஒதுக்கப்படுவதில்லை, என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி கல்வித்துறை வாயிலாக, குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் பிறந்த தினவிழா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. அவ்வகையில், முதற்கட்டமாக, பள்ளி அளவில், இம்மாதம் இறுதிக்குள் போட்டிகள் நடத்தி முடிக்கப்படும்.ஜூலை மாதம் முதல் குறுமைய போட்டியைத் தொடர்ந்து, மண்டல மற்றும் மாநில போட்டியும் நடத்தி முடிக்கப்படவுள்ளது.அதன்படி, போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் நோக்கில், அரசு பள்ளி மாணவ, மாணவியர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர். குறிப்பாக, உடற்கல்வி ஆசிரியர் வாயிலாக ஒவ்வொரு விளையாட்டிலும் திறன் வாய்ந்த மாணவர்கள் கண்டறியப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது.ஆனால், போட்டியில் பங்கேற்க செல்லும் மாணவ, மாணவியருக்கு போக்குவரத்து செலவு மற்றும் தினப்படிக்கு, எந்தவித நிதியும் பள்ளி வாயிலாக ஒதுக்கப்படுவதில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைமையாசிரியர்கள் கூறியதாவது:போட்டியை நடத்தும் பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்கான தண்ணீர் மற்றும் டீ செலவு, நடுவர்களாக செயல்படும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உணவு செலவினங்களை மட்டும் ஏற்கும்.இதனால், பள்ளியில் இருந்து, ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் மாணவர்களுக்கான போக்குவரத்து செலவை, அவரவரே ஏற்றுக் கொள்ள வேண்டும். பள்ளியில் இருந்து போக்குவரத்து செலவு மற்றும் தினப்படி அளிக்க, அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.இல்லையெனில், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், தங்களது சொந்த செலவில் மாணவர்களை போட்டிக்கு அழைத்து செல்ல வேண்டும்.இவ்வாறு, கூறினர்.