கோவை : ரேஸ்கோர்ஸ் நடைப்பயிற்சி பகுதியில், கூடுதல் கழிப்பறைகள் அமைக்க வேண்டும் என, நடைப்பயிற்சி செய்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவையின் இதய பகுதியாகவும், பசுமை மாறாத பகுதியாகவும், ரேஸ்கோர்ஸ் பகுதி விளங்குகிறது. இங்குள்ள நடைபாதையில் தினமும் காலை, மாலை நேரங்களில், 1000க்கும் மேற்பட்டவர்கள், நடைப்பயிற்சி செய்து வருகின்றனர்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இந்த பகுதி புனரமைக்கப்பட்டு, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.ஆனால், கழிப்பறைதான் பற்றாக்குறையாக உள்ளது. மீடியா டவர் அருகில் ஒரு இடத்தில் மட்டுமே கழிப்பறை வைக்கப்பட்டுள்ளது. 2.5 கி.மீ., சுற்றளவு உள்ள இந்த பாதையில், வேறு எந்த இடத்திலும் கழிப்பறை வசதி இல்லை. காஸ்மோபாலிட்டன் கிளப் பகுதி, ஆல்சோல்ஸ் சர்ச் பகுதி மற்றும் சாரதாம்பாள் கோவில் பகுதிகளில், பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுகின்றனர்.இங்கு குழந்தைகள் பூங்காக்களும் உள்ளன. குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்த வசதியாக கழிப்பறைகள்தான் இல்லை.நடைபயிற்சியாளர்கள் சிலர் கூறுகையில், 'ஸ்மார்ட் சிட்டியில அத்தனை கோடி, இத்தனை கோடியில வேலை செஞ்சிருக்காங்கன்னு சொல்றாங்க. அவசரத்துக்கு யூரின் போக கூட வசதியில்லையே...எங்க குரூப்புல நாலு பேருக்கு சுகர் இருக்கு. அடிக்கடி யூரின் போக வேண்டியிருக்கு. அடக்க முடியறதில்லை. ஜென்ட்ஸ் பரவாயில்லை. அந்த பக்கம் எங்கயவாது போயிறலாம். லேடீஸ் நிலைதான் கஷ்டம். கார்ப்பரேஷன் கமிஷனர்கிட்ட சொல்லுங்க சார்...' என்றனர்.கமிஷனரிடம் இதோ சொல்லி விட்டோம். என்ன செய்கிறார் என பார்ப்போம்!
மிரட்டுது 'போல்ட்டு'
ரேஸ்கோர்ஸ் குழந்தைகள் பூங்காக்களில் உள்ள, விளையாட்டு உபகரணங்கள் உடைந்த நிலையில் உள்ளன. பூங்கா நடுவில் உள்ள கான்கிரீட் தளங்களில், கம்பி போல்ட்டுகள் ஆபத்தான நிலையில் வெளியே நீட்டிக்கொண்டுள்ளன. இதில் குழந்தைகள் தெரியாமல் கால் வைத்து, தவறி விழுந்து காயமடைகின்றனர். பூங்கா உள்ள இடங்களில், போதிய விளக்குகளும் இல்லை.நடைபாதை ஓரங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஸ்போர்ட்ஸ் ஆடைகள், பேல்பூரி, சுண்டல் மற்றும் சூப், கீரை கடைகள் நடைபாதையில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை அனைத்தும், நடைப்பயிற்சி செய்வோருக்கு இடையூறாக உள்ளது.