உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிங்காநல்லுார் வாகன நெரிசலுக்கு இப்போதைக்கு இல்லை தீர்வு! பாலம் கட்ட வந்தது ஒரே டெண்டர்

சிங்காநல்லுார் வாகன நெரிசலுக்கு இப்போதைக்கு இல்லை தீர்வு! பாலம் கட்ட வந்தது ஒரே டெண்டர்

கோவை: கோவை - திருச்சி ரோட்டில், வரதராஜபுரம் ரோடு, ஒண்டிபுதுார் ரோடு, வெள்ளலுார் ரோடு ஆகியவை சிங்காநல்லுாரில் சந்திக்கின்றன. சமீபத்தில் எடுத்த ஆய்வில், ஒரு மணி நேரத்துக்கு, 20 ஆயிரம் வாகனங்கள் இப்பகுதியை கடப்பது தெரியவந்தது. இப்பகுதியை கடக்க வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.இதற்கு தீர்வு காண, ஒண்டிப்புதுார் பாலம் அருகே செயின்ட் ஜோசப் பள்ளிக்கு முன் துவங்கி, சிங்காநல்லுார் சந்திப்பை கடந்து, மேற்கு மின்வாரிய அலுவலகம் வரை, 2,400 மீட்டர் நீளத்துக்கு, 54 கண்களுடன் நான்கு வழி மேம்பாலம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. திட்ட மதிப்பீடு ரூ.110.80 கோடியாகும். ரோட்டின் இருபுறமும் 1.5 மீட்டர் அகலத்துக்கு மழை நீர் வடிகால் கட்டவும், 5.5 மீட்டர் அகலத்தில் இருந்து, 7 மீட்டராக அணுகுசாலை விஸ்தரிக்கவும் திட்டமிடப் பட்டது.2022ல் டெண்டர் கோரப்பட்டு, பரிசீலிக்கப்பட்டது; அவ்வாண்டு நவ., - டிச., மாதமே பணியை துவக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர். ஆனால், 'மெட்ரோ ரயில்' வழித்தடம் இறுதி செய்ய வேண்டியிருந்ததால், இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தடையின்மை சான்று பெற்று, 2023 செப்., 11 மீண்டும் டெண்டர் கோரப்பட்டது. திட்ட மதிப்பீட்டில் இருந்து, 35 சதவீதம் அதிகமாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதால், டெண்டர் ரத்து செய்யப்பட்டது. அதனால், 2024ல் மார்ச் 7க்கு மறுடெண்டர் கோரப்பட்டது; எந்த நிறுவனமும் முன்வராததால், அக்., 23 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் டெண்டர் கோரப்பட்டது. இம்முறை ஒரே ஒரு நிறுவனமே டெண்டர் கோரியதால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 'அப்செட்' ஆகியுள்ளனர். இவ்விவரத்தை, டில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு தெரிவித்திருக்கின்றனர். மீண்டும் டெண்டர் கோர முடிவு செய்துள்ளனர்.தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'சிங்காநல்லுாரில் மேம்பாலப் பணி மேற்கொள்ள ஒரே ஒரு நிறுவனமே டெண்டர் கோரியது. அதனால், மறுடெண்டர் கோர இருக்கிறோம். அதுதொடர்பாக பரிசீலனை மேற்கொண்டு, டெண்டர் இறுதி செய்ய, 2025 ஏப்., மாதமாகி விடும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Palanivel
டிச 13, 2024 09:20

சிண்டிகேட் போட்டு அடுத்த ஒப்பந்ததாரர்களை சரிகட்டியாச்சு என்னத்தையோ பண்ணுங்கப்பா மொத்தத்தில் பொதுமக்கள் சிரமத்தை போக்க வழி ஏற்படுத்துங்கள் இந்தகட்சி ஆட்சிக்கு வந்தால் அந்த கட்சியை குறை சொல்வதும் அந்த கட்சி வந்தால் இந்தகட்சியை குறைசொல்வதும் ஒரு பொழப்பாயா பதவிக்கு வந்தாச்சுனா செய்ய வேண்டியதை போர்க்கால அடிப்படியில் வேலைகளை செய்யனும் இதில் கமிசன் வாங்காம இருக்கிறானுகளா என்ன அப்புறம் எதற்கு ஒரு சிறிய பாலத்துக்கு இவ்வளவு நாட்கள் இழு இழுனு இழுக்க வேண்டியுள்ளது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை