வரி மேல் வரி போட்டுத்தள்ளுறாங்க; ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் குமுறல்
கோவை; வரி மேல் வரி செலுத்த வற்புறுத்தி, நெருக்கடிக்குள்ளாக்கும் போக்குவரத்துத்துறையினர் மீது, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆம்னிபஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் இயக்குவோர் சங்க நிறுவனர் பாண்டியன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: போக்குவரத்துத்துறையின் கீழ் செயல்படும், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், ஆம்னிபஸ்களில் சோதனை மேற்கொள்கின்றனர். பஸ் புறப்படும் இடம், டோல்கேட் சேரும் இடத்திற்கு முன்பு என்று பல இடங்களில் சோதனை என்ற பெயரில், பல இடங்களில் அடக்குமுறையை கையாள்கின்றனர். இதனால் மணிக்கணக்கில் தாமதம் ஏற்படுவதோடு, டிரைவரையும் உதவியாளரையும் திட்டுகின்றனர். இதனால் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதோடு, பயணிகளுக்கும் அசவுகரியம் ஏற்படுகிறது. அகில இந்திய அளவில் 'பர்மிட்' பெற்று, இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கு, தமிழகம் தவிர பிற மாநிலங்களில், எந்தவித கட்டுப்பாடுகளோ, கெடுபிடிகளோ இல்லை. 'மதர்டேக்ஸ்', 'ஒன் இந்தியா டேக்ஸ்' என்று இரு வகையான வரி செலுத்தி, பஸ்சை இயக்குகிறோம். தமிழகத்துக்கு மட்டும் 'சிறப்பு வரி' செலுத்த, தமிழக போக்குவரத்துத்துறை கட்டாயப்படுத்துகிறது. இதை எதிர்த்து, உயர்நீதி மன்றத்தில் தடை பெற்றிருந்தும், வரி செலுத்த தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறோம். இவ்வாறு, பாண்டியன் கூறினார். சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.