உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இது பண்டிகை காலம்... இனி முண்டியடிக்கும் கூட்டம்; தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்

இது பண்டிகை காலம்... இனி முண்டியடிக்கும் கூட்டம்; தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்

கோவை: பண்டிகை காலம் என்பதால், கோவை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் கூட நுழைய முடியாத, நெருக்கடியான பழைய வணிக வளாகங்கள் பல உள்ளன. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டியது அவசியம். எப்போதும் பரபரப்பாக காணப்படும், கோவை டவுன்ஹால் பகுதியில் ஒரு வணிக நிறுவனத்தில் சில நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கூட பெருமளவில் பொருட் சேதம் ஏற்பட்டது. தீயை முற்றிலும் அணைக்க, கிட்டத்தட்ட நான்கு மணி நேரமானது. இப்போது தீபாவளி பண்டிகை நேரம். வணிக நிறுவனங்களுக்கு பொதுமக்கள் சாரை சாரையாக வருவர். ஒவ்வொரு நிறுவனத்துக்குள்ளும் ஆயிரக்கணக்கானோர் இருப்பர். ஷாப்பிங் செய்யும் மும்முரத்தில் இருக்கும் அவர்கள், பாதுகாப்பை சற்றும் உணராமல் இருப்பர். சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வணிக நிறுவனத்தினரும், தங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறினார். வணிக வளாகங்கள் சிலவற்றில், அவசர கால வழி இல்லாதது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ''கோவையில், அனைத்து வணிக வளாகங்களிலும், அவசரகால வழிகள் உள்ளன. அவசர கால வழிகள் இருந்தால், மட்டுமே வணிக வளாகங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படுகிறது,'' என்றார். சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்ட டவுன்ஹால் பகுதி வணிக வளாகம் மற்றும் சில பழைய வணிக வளாகங்களில், அவசர கால வழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆய்வு நடத்தி, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

''தீ விபத்து ஏற்பட்டால், கடைகள், வணிக வளாகங்கள், அபார்ட்மென்ட்டில் உள்ள பொதுமக்கள் பதற்றம் அடையாமல் விரைந்து வெளியேற வேண்டும். முண்டியடித்துக் கொண்டு வெளியேறக் கூடாது. முண்டியடிக்கும்போது, யாரும் வெளியேற முடியாத நிலை ஏற்படும். ஒவ்வொருவராக விரைந்து வெளியேற வேண்டும்,'' என்றார் தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி.

வணிக நிறுவனங்கள் பின்பற்ற வேண்டியவை

* வணிக வளாகங்களில் தீத்தடுப்புகருவிகளை பொருத்தி, அவற்றைமுறையாக பராமரிக்க வேண்டும். * அவற்றை பயன்படுத்தும் முறை குறித்து, ஊழியர்களுக்கு பயிற்சி அளித்திருக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும். * வணிக நிறுவனங்களில் அவசரகால வழி அமைத்திருக்க வேண்டும். * பண்டிகை காலம் என்பதால், வணிக நிறுவனங்கள் தங்களது சரக்குகளை கடைகளில் அதிகளவு வைத்திருக்கக் கூடாது. * குடோனை வேறு பகுதியில் வைத்திருக்க வேண்டும். விற்பனைக்கேற்ப கடைகளுக்கு கொண்டு வர வேண்டும். * விற்பனை நேரம் முடிந்து, இரவில் கடையை மூடும்போது, பிரதான மின் இணைப்பை 'ஆப்' செய்ய வேண்டும். * கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருக்க வேண்டும். * புகை ஏற்பட்டால் எச்சரிக்கும் கருவி, தானியங்கி ஸ்பிரிங்லர்ஸ் பொருத்த வேண்டும். * தீவிபத்து ஏற்பட்டால், தீயணைப்பு நிலையத்துக்கு, 0422 - 2300101 என்று எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி