உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டவுன்ஹாலில் வாகன நெரிசல் தவிர்க்க.. புதிய பாதை! வாலாங்குளக்கரையில் வழித்தடம் அமைப்பு

டவுன்ஹாலில் வாகன நெரிசல் தவிர்க்க.. புதிய பாதை! வாலாங்குளக்கரையில் வழித்தடம் அமைப்பு

கோவை: கோவை கோட்டைமேடு மற்றும் டவுன்ஹால் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, லங்கா கார்னர், பர்மா செல் சாலை வழியாக உக்கடம் செல்ல, 805 மீட்டர் துாரத்துக்கு வாலாங்குளக்கரையில் புதிதாக உருவாக்கிய வழித்தடம் நேற்று பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.கோவையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லங்கா கார்னரில் இருந்து டவுன்ஹால் மற்றும் கோட்டைமேடு வழியாக வாகனங்கள் செல்லும்போது, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. 'பீக் ஹவர்ஸ்' சமயத்தில் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் போலீசார் தடுமாற்றம் அடைகின்றனர். உக்கடம் செல்வதற்கு கூட்ஸ்ஷெட் சந்திப்பு சிக்னலில் நிற்க வேண்டியுள்ளது; கோட்டைமேடு வழியாக சென்றால் நெரிசலில் சிக்க வேண்டுமென நினைத்து டவுன்ஹால் வழியாக சென்றால், விக்டோரியா ஹால் முன்புள்ள சிக்னலில் காத்திருந்து, உக்கடம் பகுதிக்குச் செல்ல வேண்டும். கூட்ஸ் ஷெட் ரோடு சந்திப்பு மற்றும் டவுன்ஹால் விக்டோரியா ஹால் முன்புள்ள சிக்னல்களில் காத்திருப்பதை தவிர்க்க, லங்கா கார்னர் அருகே இடது புறம் திரும்பி, பர்மா செல் சாலை வழியாக வாலாங்குளக்கரையை பயன்படுத்தி, கோட்டைமேடு பாலம் அருகே சென்றடைந்து, வாலாங்குளம் ரவுண்டானாவில் இருந்து உக்கடம் செல்ல வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. குளக்கரையில், 805 மீட்டர் நீளத்துக்கு இச்சாலை அமைந்துள்ளது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் செல்லலாம். லங்கா கார்னரில் இருந்து மட்டுமே செல்ல வேண்டும்; எதிர் திசையில் வரக்கூடாது. வாகனங்களில் செல்வோர் குளத்துக்குள் விழுந்து விடக்கூடாது என்பதற்காக, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 'வாக்கிங்' செல்வோருக்காக இச்சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இத்தனை நாட்களாக பயன்பாடு இல்லாமல் இருந்தது. அச்சாலையை பயன்பாடுக்கு கொண்டு வரும் வகையில், 36 லட்சம் ரூபாயில் மேம்பாட்டு பணிகள் செய்து, நேற்று திறந்து விடப்பட்டது. கோவை எம்.பி., ராஜ்குமார், துவக்கி வைத்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தனர். கூடுதலாக இரு இடங்களில் வேகத்தடை அமைக்க, கலெக்டர் பவன்குமார் அறிவுறுத்தினார். மாற்று வீடு ஒதுக்கியதும் ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு பர்மா செல் சாலையில், வாலாங்குளத்துக்கு நீர் செல்லும் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டு இருந்தன. அவற்றை அகற்றினால், லங்கா கார்னரில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கலாம் என நமது நாளிதழில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், அவ்விடத்தை நேரில் ஆய்வு செய்து, சுரங்கப்பாதையில் 'கான்கிரீட் பாக்ஸ்' வடிவிலான மழைநீர் வடிகால் பதித்தார். முதல்கட்டமாக, ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. ஒன்பது வீடுகள் இருந்தன. இவ்வீட்டில் வசித்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாற்று வீடு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் ஒப்புதல் வழங்கி, உத்தரவு பிறப்பித்ததும், மீதமுள்ள வீடுகளை இடித்து அகற்ற, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் முடிவு செய்துள்ளனர். அவற்றை இடித்து வாய்க்காலை அகலப்படுத்தினால், லங்கா கார்னரில் மழை நீர் தேங்குவதை முற்றிலும் தவிர்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !