இன்றைய இளைஞர்களுக்கு தேசத்தின் மீது அக்கறை குறைவு; கிருஷ்ணராஜ் வாணவராயர் பேச்சு
கோவை; கோவை மாவட்ட பஞ்சாலை தொழிற்சங்கங்களின் சார்பில், 'கோவை பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் துரைசாமியின், 65 ஆண்டுகால தொழிற்சங்க பணியைப் பாராட்டும் விதமாக, பாராட்டு விழா, ஹோப் காலேஜ் அருகே, தனியார் மண்டபத்தில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில், மூத்த வழக்கறிஞர் நாகசுப்பிரமணியன் பேசியதாவது:துரைசாமி, அரசியல் கட்சியில் இருப்பினும் தொழிலாளர்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தினார். அவர்,வளைந்து கொடுத்திருந்தால் அமைச்சர் பதவிகள் தேடி வந்திருக்கும்.சொத்துகள் அனைத்தும் தொழிற்சங்கத்தின் பெயரிலேயே வாங்கினார். அவற்றில் தற்போது உபயோகமில்லாத சொத்துகளை விற்று, பணமாக்கி, அறக்கட்டளை துவக்கி, அதன் வாயிலாக தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி கிடைக்கச் செய்ய வேண்டும். இதனை அவர் செய்து முடிப்பார்.இவ்வாறு, அவர் பேசினார்.பாரதீய வித்யா பவன் தலைவர், கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசியதாவது:நான் இப்போது சைமா தலைவராக இருந்திருந்தால், துரைசாமிக்கு மிகப் பிரம்மாண்டமான விழா எடுத்திருப்பேன். தொழிற்சங்க தலைவர் பொறுப்பு மிக சிரமமானது. முதலாளிகள், தொழிலாளிகள் என இருதரப்பையும் கவனமாக அனுசரித்துச் செல்ல வேண்டும். அதில், துரைசாமி விற்பன்னர்.விடுதலைக்குப் பின் நாம் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்றுள்ளோம். இதை விடவும் சாதித்திருக்க முடியும். தற்போதைய இளைஞர்களுக்கு தேசத்தின் மீது அக்கறை குறைவு.ஒவ்வொரு இந்தியருக்கும் அதில் பங்கும், பொறுப்பும் இருக்க வேண்டும். எப்போது காசு வாங்கிவிட்டு ஓட்டுப்போட்டோமோ, அப்போதே தேசத்தின் மீதான அக்கறை விட்டுப்போய்விட்டது. இதனை 40 ஆண்டுகளுக்கு முன் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டோம். தனிமனித, பொதுச்சமூக ஒழுக்கம் அறவே இல்லாமல் போய்விட்டது.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், துரைசாமி ஏற்புரையாற்றினார். அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.முன்னாள், கூடுதல் தொழிலாளர் நல கமிஷனர் மாரிமுத்து, தொழிற்சங்க தலைவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.