திட்டமிடாமல் அமைத்த ரவுண்டானாவால் அவதி: ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்
கோவை:கோவை, உப்பிலிபாளையம் சந்திப்பில், முறையாக திட்டமிடாமல் 'ரவுண்டானா' அமைத்த காரணத்தால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. கோவை, அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ., துாரத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உப்பிலிபாளையம் சந்திப்பில் புதிதாக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. நெருக்கடி பழைய மேம்பாலத்தில் இருந்து வருவோர், நஞ்சப்பா ரோட்டில் இருந்து வருவோர், ஆடீஸ் வீதியில் இருந்து வருவோர், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வருவோர் சந்தித்துக் கொள்கின்றனர். அதில், புதிய மேம்பாலத்தில் இருந்து இறங்கி வருவோரும் இணைவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ரவுண்டானா அமைப்பதற்கு முன், இச்சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது இல்லை. புதிய மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்து, இப்பகுதியை வாகனங்கள் கடந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து, 10 நிமிடத்தில் வாகனங்கள் வந்து விடுகின்றன. உப்பிலிபாளையம் சந்திப்பில் சிக்கிக்கொள்கின்றன. முறையாக திட்டமிட்டு, கள ஆய்வு செய்யாமல், ரவுண்டானா அமைத்ததே, இந்த சிரமத்துக்கு காரணம். இதையடுத்து, ரவுண்டானா அருகே 'டிவைடர்'கள் வைத்து மறிக்கப்பட்டு, வாகனங்கள் நேராகச் சென்று எல்.ஐ.சி., சிக்னல் அருகே, 'யு டர்ன்' செய்து, கலெக்டர் அலுவலகம் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தடை கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து மேம்பாலத்தில் வரும் அனைத்து வாகனங்களும், உப்பிலிபாளையம் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அண்ணாதுரை சிலை அருகே உள்ள இறங்கு தளத்தில் இறங்கி, அவிநாசி ரோடு வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இதன் காரணமாக, மேம்பாலத்தில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவே மேம்பாலம் கட்டப்பட்டது. அந் நோக்கம் முற்றிலும் தடைபட்டுள்ளது. கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ''போக்குவரத்து நெரிசல் எங்கு அதிகம் இருக்கிறதோ, அதற்கேற்ப மாற்றி அனுப்புகிறோம். தற்போது தீபாவளி கூட்டம் அதிகம் இருப்பதால், இந்நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. ''புதிதாக திறக்கப்பட்ட பாலம் என்பதால், அதை பார்க்கவும் ஏராளமானோர் வருகின்றனர். அனைவரையும் ஒழுங்கு படுத்தவே இந்நடை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உப்பிலிபாளையம் ரவுண்டானாவில், தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
பஸ் ஸ்டாப் அவசியம்
அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கட்டுமானப் பணிக்காக, உப்பிலிபாளையம், எல்.ஐ.சி., சிக்னல் எதிர்புறம் இருந்த பஸ் ஸ்டாப்கள் அகற்றப்பட்டன. இதுவரை அவை ஏற்படுத்தப்படவில்லை. லட்சுமி மில்ஸ் சிக்னலில் இருந்து வரும் பஸ்கள், அண்ணாதுரை சிலை சந்திப்பில் இருந்து உப்பிலிபாளையத்துக்கு நேராக செல்லாமல், ஒசூர் ரோடு வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இதன் காரணமாக இந்த ரோட்டில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு, பஸ்களை உப்பிலிபாளையம் வழியாக இயக்க வேண்டும். கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) விஸ்வநாதன் கூறுகையில்,''எல்.ஐ.சி., சிக்னலில் இருந்து நேராக பஸ்கள் இயக்குவது குறித்தும், மீண்டும் ஸ்டாப்கள் ஏற்படுத்தி, பஸ்கள் நிறுத்தப்படுவது குறித்தும் சாலை பாதுகாப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்படும்,'' என்றார்.