உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதான ரோட்டில் போக்குவரத்து நெரிசல்; விபத்து அபாயம்

பிரதான ரோட்டில் போக்குவரத்து நெரிசல்; விபத்து அபாயம்

ரோட்டில் கழிவு நீர்

பொள்ளாச்சி, பல்லடம் ரோட்டில் இருந்து ஐந்து ரோடு சந்திக்கும் இடத்தில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் சாலை போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதுடன், கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை நகராட்சி அதிகாரிகள் கவனித்து சரி செய்ய வேண்டும்.- -மாணிக்கம், பொள்ளாச்சி.

ரோடு சேதம்

பொள்ளாச்சி, சி.டி.சி., மேட்டில் இருந்து ஆச்சிபட்டி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை, ஆங்கங்கே சேதம் அடைந்து காணப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் செல்லும் போது பைக் ஓட்டுநர்கள் சிலர் கீழே விழுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதை கவனித்து ரோட்டை சீரமைக்க வேண்டும்.- -பழனிசாமி, பொள்ளாச்சி.

நாய் தொல்லை

பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி ஆபீஸ் அருகே, நாய் தொல்லை அதிகரித்து வருவதால், மக்கள் இவ்வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, இங்கு சுற்றிதிரியும் நாய்களை கட்டுப்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -ராஜன், ஜமீன் ஊத்துக்குளி.

விதி மீறும் பயணியர்

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் பயணியர், ரயிலிலிருந்து இறங்கி நடைமேடையை பயன்படுத்தாமல், இருப்பு பாதையை கடந்து செல்கின்றனர். ஆபத்தை உணராமல் விதிமுறையை மீறும் பயணியர் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கணேசன், உடுமலை.

ரோடு விரிவாக்கம் தேவை

தேவனாம்பாளையம் - வகுத்தம்பாளையம் செல்லும் ரோட்டில், பி.ஏ.பி., கால்வாய் உள்ளது. இங்கு ரோடு குறுகலாக உள்ளது. இதனால் பெரிய அளவிலான வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, ரோட்டை அகலப்படுத்தி அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -தம்பு, நெகமம்.

தேங்கும் தண்ணீர்

உடுமலை, உழவர் சந்தை ரோட்டில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரில் கழிவுகள் கொட்டப்படுவதால் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக வாகனங்கள் செல்வதற்கும் முடியாமல் மழைநீர் குளமாக நிற்கிறது. ரோட்டில் வடிகால் முறையாக இல்லாததால் மழை நாட்களில் தொடர்ந்து மழைநீர் தேங்குகிறது.- ராஜேஸ்வரி, உடுமலை.

போக்குவரத்து நெரிசல்

உடுமலை ராஜேந்திரா ரோட்டில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மேலும் ஆக்கிரமிப்புகளாக தள்ளுவண்டி கடைகளும் போடப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கருப்புசாமி, உடுமலை.

ரோட்டில் கட்டடக்கழிவுகள்

உடுமலை, செல்லம் நகரில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. ரோட்டில் உள்ள குழிகளில் பலரும் கட்டடக்கழிவுகளை நிரப்புகின்றனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி பஞ்சர் ஆகின்றன. முதியவர்கள் நடந்துசெல்வதற்கும் முடியாமல் ரோட்டில் உள்ள குழிகளால் தவறி விழுகின்றனர்.- பாலகுமார், உடுமலை.

தெருநாய்கள் தொல்லை

உடுமலை, நேரு வீதி எக்ஸ்டன்சன் ரோட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருநாய்கள் வாகன ஓட்டுநர்களை துரத்தி அச்சுறுத்தி செல்கின்றன. அப்பகுதியிலுள்ள குழந்தைகள் வெளியில் விளையாடுவதற்கும் அச்சப்படுகின்றனர். குப்பைக்கழிவுகளை தொட்டிகளிலிருந்து இழுத்து வந்து போடுவதால், சுகாதார பிரச்னைகளும் ஏற்படுகிறது.-பானுமதி, உடுமலை.

பகலில் ஒளிரும் மின்விளக்கு

கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் செல்லும் ரோட்டில் இருக்கும் தெருவிளக்கு பகல் நேரத்தில் எரிகிறது. இதனால், மின்சாரம் வீணாகும் நிலை ஏற்படலாம். இதை பணியாளர்கள் கவனித்து, இரவில் மட்டும் எரியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -பிரகாஷ், கிணத்துக்கடவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை