உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புலிகள் கணக்கெடுக்கும் பணி: வன ஊழியர்களுக்கு பயிற்சி

புலிகள் கணக்கெடுக்கும் பணி: வன ஊழியர்களுக்கு பயிற்சி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடை வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடர்பாக, மேட்டுப்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் வன ஊழியர்களுக்கு எவ்வாறு கணக்கெடுப்பில் ஈடுபட வேண்டும் என பயிற்சி வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய வனப்பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மூன்று நாட்கள் கோவை வனக்கோட்டம் ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முரண்பாட்டு மேலாண்மை மையம் சார்பாக புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.இதையடுத்து, இந்த ஆண்டு இம்மாதம் புலிகள் கணக்கெடுப்பு பணி விரைவில் துவங்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக, புலிகள் கணக்கெடுப்பிற்கான பயிற்சி மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நேற்று நடைபெற்றது. மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசி குமார் தலைமையில், கோவை வனக்கோட்டம் ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முரண்பாட்டு மேலாண்மை மைய ஆராய்ச்சியாளர் நவீன், வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த வனப்பகுதியில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக் காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சி அளித்தார். முதல் கட்ட பயிற்சியாக நேர் கோட்டு பாதையில் செடி, கொடி புதர்களை அகற்றுவது, தூய்மை பணியில் ஈடுபடுவது, திசைகாட்டி வாயிலாக நேர்கோடு அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பின் வேட்டையாடும் வன விலங்குகளின் தடங்கள் மற்றும் எச்சங்களைக் கண்டறிந்து மறைமுக கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுதல் குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப் பட்டது. இப்பயிற்சியில் மேட்டுப்பாளையம் காரமடை ஆகிய வனச்சரகங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி