கோவை:காட்டுத்தீ ஏற்பட்டால் அதை தடுப்பது எப்படி என்பது குறித்து, பல்வேறு துறையினர் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்தில், பயிற்சி அளிக்கப்பட்டது.கோவை வனக்கோட்டத்தில், காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை வன அலுவலகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில், காட்டுத்தீ தடுப்பு ஆயத்தம் மற்றும், காட்டுத்தீயின் போது வனவிலங்குகளை பாதுகாக்க, மீட்கும் வழிமுறைகள் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், பல்வேறு அரசு துறை அலுவலர்கள், கிராம வனக்குழு தலைவர்கள், அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.கோவை வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார் கூறுகையில், ''வனத்தீ தடுப்பு, மேலாண்மை திட்டத்தை வனத்துறை செயல்படுத்தி வருகிறது. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், துண்டு பிரசுரம் வழங்குதல், கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. காட்டுத்தீ ஏற்படும் போது, வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இப்பயிற்சி வாயிலாக காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்ப உக்திகளை வழங்கும்,'' என்றார்.தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறை அலுவலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், வேட்டைத்தடுப்பு காவலர்களுக்கு தீ பாதுகாப்பு உடைகள், டார்ச்லைட், முதல் உதவிப்பெட்டிகள், தீயணைப்பான் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.