உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருநங்கை கொலை வழக்கு; தொழிலாளிக்கு ஆயுள் சிறை

திருநங்கை கொலை வழக்கு; தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கோவை; திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில், ஹோட்டல் தொழிலாளிக்கு ஆயுள் சிறை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோவை, சாய்பாபா காலனியில், 'டிரான்ஸ் கிச்சன்' என்ற பெயரில் பிரியாணி ஹோட்டல் நடத்தி வந்தவர் திருநங்கை சங்கீதா,59. கோவை மாவட்ட திருநங்கை சங்க தலைவராக இருந்த அவர், 2020, அக்., 20ல், என்.எஸ்.ஆர்., ரோட்டில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு, பிளாஸ்டிக் டிரம்முக்குள் அடைக்கப்பட்டு சடலமாகக் கிடந்தார். சாய்பாபா காலனி போலீசார் விசாரித்தபோது, சங்கீதாவின் ஹோட்டலில் தங்கி வேலை செய்த, நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த ராஜேஷ்,29, என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. தலைமைறைவான ராஜேசை கைது செய்து விசாரித்தபோது, சங்கீதா கொலையாவதற்கு, 20 நாட்களுக்கு முன் ராஜேஷ் வேலைக்குச் சேர்ந்ததும், சங்கீதாவுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததும், போலீசில் புகார் கொடுக்கப் போவதாக சங்கீதா கூறியதால்,ஆத்திரமடைந்து, கழுத்தை அறுத்து கொலை செய்து, 20,000 ரூபாயை திருடி தப்பியதும் தெரியவந்தது. அவர் மீது, கோவை எஸ்.சி., - எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்ட ராஜேசுக்கு, கொலை குற்றத்துக்கு ஆயுள் சிறை, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு ஆயுள் சிறை, தடயம் மறைத்த குற்றத்துக்கு, 7 ஆண்டு சிறை, மொத்தம், 20,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பாலசுப்பிரமணியன் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !