உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லாறு -- பர்லியார் இடையே விரைவில் மலையேற்றம்! 3.5 கி.மீ., துாரம் பணிகள் தீவிரம்

கல்லாறு -- பர்லியார் இடையே விரைவில் மலையேற்றம்! 3.5 கி.மீ., துாரம் பணிகள் தீவிரம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில், கல்லாறு-பர்லியார் இடையே 3.5 கி.மீ., துாரம் அடர் வனப்பகுதியில் விரைவில் மலையேற்றம் மேற்கொள்ளலாம். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.மலையேற்றம் திட்டத்தை, தமிழக வனத்துறை மீண்டும் துவங்கியுள்ளது. இதற்காக தமிழக வனப்பகுதிகளில் 40 இடங்கள் தேர்வாகி உள்ளன. இதில், கோவை மாவட்டத்தில் 4 இடங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கல்லாறு-- பர்லியார் இடையே மலையேற்றம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''கல்லார் - - பர்லியார் இடையே 3.5 கிலோ மீட்டர் துாரம் மலையேற்றம் மேற்கொள்ளும் வகையில் முதல் கட்டமாக வழித்தடம் கண்டறியப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக வழிகாட்டியாகவும், பறவை காணுதல், முதலுதவி சிகிச்சை அளித்தல், உணவு தயாரித்து வழங்குதல் உள்ளிட்டவைகளுக்காக பழங்குடி மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மலையேற்ற திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும்,'' என்றார். மேட்டுப்பாளையம் வனச்சரகம், 9,780 எக்டேர் பரப்பில் அமைந்துள்ளது. குன்னுார், கோத்தகிரி மலைகள் உட்பட மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதிகள் இந்த வனச்சரகத்தில் உள்ளன. இங்கு புலி, யானை, சிறுத்தை, காட்டுடெருமை, மான், கரடி என பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.மலைப்பகுதியில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீர், வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தேங்கியுள்ள மழை நீர் போன்றவைகள் வனப்பகுதியில் உள்ள மரம் மற்றும் வனவிலங்குகளின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளன. மலையேற்றம் செல்லும் போது சுற்றுலா பயணிகள் நீரோடைகளுக்கு தாகம் தீர்க்க வரும் வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம் என்பதால், இத்திட்டம் செயல்படுத்தும் போது பெரும் வரவேற்பை பெரும் என நம்பப்படுகிறது. இதனால் மேட்டுப்பாளையம் பகுதியில் வணிக ரீதியாக இங்குள்ள லாட்ஜ்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், டீ கடைகள் என வணிக பெருமக்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை