நடைபாதையில் ஆக்கிரமிப்பு; நடந்து செல்வோர் பாதிப்பு
வால்பாறை : நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகர் பகுதியில் உள்ள குறுகலான ரோட்டில் தான், அனைத்து வாகனங்களும் செல்கின்றன. நகரில் வாகன நெரிசலால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.இந்நிலையில் நகராட்சி சார்பில், பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் வரை, ரோட்டின் இருபுறமும் மக்கள் நடந்து செல்லும் வகையில், தடுப்புக்கம்பியுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது.இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணியர் நிம்மதியாக நடந்து சென்றனர். இந்நிலையில், நடைபாதையை ஆக்கிரமித்து சில வியாபாரிகள் மீண்டும் கடைகள் வைத்துள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது: நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளதால், காலை, மாலை நேரத்தில் பள்ளி முடிந்து நடந்து செல்லும் மாணவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மக்கள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. குறுகலான ரோட்டில் நடந்து செல்வதால் வாகன விபத்து ஏற்படுகிறது.நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.