வீட்டு மனை அங்கீகாரத்துக்கு லஞ்சம்: இருவர் சிக்கினர்
அன்னுார்: கோவை மாவட்டம், அன்னுார் அருகே மூக்கனுாரை சேர்ந்தவர் ராஜன் பிரபாகரன், 45. இவர் தனக்கு சொந்தமான ஐந்து வீட்டுமனைகளை அங்கீகாரம் செய்ய, மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஊராட்சி செயலர் ரங்கசாமி, மனை இடங்களை அங்கீகாரம் செய்வதற்கு அரசு கட்டணம் உட்பட, 25,000 ரூபாய் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத ராஜன், கோவை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அறிவுரைப்படி, நேற்று மதியம் ராஜன், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று, ஊராட்சி செயலர் ரங்கசாமியிடம், 25,000 ரூபாய் தந்துள்ளார். பணத்தை அங்குள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பூபதியிடம் தரும்படி ரங்கசாமி கூறினார்.ராஜனிடம், பூபதி பணத்தை பெற்ற போது, மறைந்திருந்த போலீசார் அவரை பிடித்தனர். இதையடுத்து, பூபதி, ரங்கசாமி இருவரையும் கைது செய்தனர்.