| ADDED : நவ 23, 2025 06:38 AM
''சு டும் வரை நெருப்பு, சுழலும் வரை பூமி, போராடும் வரை மனிதன்... நீ மனிதன்'' என்ற வைர வரிகள் தான், பெரியநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் ஜெனிதாவின் வாழ்க்கையை பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. ஜெனிதாவுடன், திருமணத்துக்குப் பின் சில ஆண்டுகள் மட்டுமே கணவர் உடன் இருந்தார். ஒரு நாள் திடீரென காணாமல் போனார். இதுவரை திரும்பவில்லை. இரண்டு ஆண் பிள்ளைகள். அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி. வாடகை வீடு. வாழ்வாதாரத்துக்கு வாழைப்பழ வியாபாரம். தினமும், 300 ரூபாய் மட்டுமே வருமானம். இதில் குழந்தைகளை வளர்த்து மாதம், ரூ.3,500 வாடகை கொடுத்து வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கடுமையான சூழல். மாற்றுத்திறனாளி குழந்தையை, ராமகிருஷ்ணா வித்யாலயாவில் உள்ள சிறப்பு பள்ளியில், வாரம் இரண்டு முறை பிசியோதெரபிக்கு, கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கு சென்று வர ஆட்டோ செலவு, 200 ரூபாய். பின்னர், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இரண்டாவது பையன் நன்றாக படிப்பதால், கிருஷ்ணா பள்ளியில் அவனுக்கு தேவையான உதவிகளை, பள்ளி நிர்வாகத்தினர் செய்கின்றனர். ''இரண்டு குழந்தைகளுடன் தனியாக விடப்பட்ட பின்பு, மனது உடைந்து நின்றால், நம்மையும், நம் குழந்தையும் யார் காப்பாற்றுவார்கள் என்ற எண்ணத்தில், பெரியநாயக்கன்பாளையத்தில் ரோட்டோரத்தில் வாழைப் பழக் கடையை துவக்கினேன். தினமும் அதில் ஓரளவு வருமானம் வருகிறது. பழக்கடை வைக்க பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு பாதுகாப்பான இடம் அளித்தால் நல்லது. அங்கு நிலையான பழக்கடையை நிறுவி, என்னையும், என் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்,'' என்கிறார் ஜெனிதா. உதவ நினைக்கும் நபர்கள் இவரை தொடர்பு கொள்ள: 82484 72779.