மின்சாரம் தாக்கி இருவர் அடுத்தடுத்து உயிரிழப்பு
தொண்டாமுத்தூர்; தீத்திபாளையத்தில், வீட்டில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து இருவர் உயிரிழந்தனர்.பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன், 31; கூலித்தொழிலாளி. இவர், நேற்று தீத்திபாளையம் அய்யாசாமி கோவில் வீதி அருகே, கட்டட வேலைக்காக சென்றுள்ளார். அப்போது, மழை பெய்ததால், அருகில் இருந்த அவரது அம்மாவின் வீட்டில், ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்.தகர சீட்டில் கை வைத்துக் கொண்டு, மொபைல் போனில் பேசி உள்ளார். அந்த வீட்டின், மின்சார இணைப்பிலிருந்து, நேரடியாக எடுக்கப்பட்டு இருந்த ஒயரில், மின்கசிவு ஏற்பட்டு, தகர சீட்டில் மின்சாரம் பாய்ந்துள்ளது.இதில், விக்னேஸ்வரன் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், விக்னேஸ்வரன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நாகராஜ், 40 என்பவர், விக்னேஸ்வரனுக்கு என்ன ஆனது என்பதை கூறிக் கொண்டிருக்கும்போது, அவரும் தகர சீட்டின் மீது கை வைத்துள்ளார்.அப்போது மின்சாரம் தாக்கி, கீழே விழுந்த நாகராஜூம் உயிரிழந்தார். ஒரே இடத்தில் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக, பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.