உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிலாளியை தாக்கிய இருவருக்கு 3 ஆண்டு சிறை

தொழிலாளியை தாக்கிய இருவருக்கு 3 ஆண்டு சிறை

கோவை; சூலுார் அருகே உள்ள மலையடிபாளையத்தைச் சேர்ந்தவர் கணேஷ், 48; கூலி தொழிலாளி. இவரது வீட்டுக்கு முன், பக்கத்து வீட்டில் வசிக்கும் மதிவாணன் என்பவர், மரங்கள் மற்றும் அட்டை பெட்டிகளை குவித்து வைத் திருந்தார். பாம்பு நடமாட்டம் இருப்பதாக கூறி, அவற்றை அகற்ற கணேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. 2017, மார்ச் 29ல், கணேஷ் வீட்டுக்கு முன் துாங்கிக் கொண்டிருந்தபோது, மதிவாணன்,60, அவரது மகன் பார்த்திபன்,35, மருமகன் ஈஸ்வரன்,32 ஆகியோர் சேர்ந்து, உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். ஜாதி பெயரைச் சொல்லி திட்டினர். படுகாயமடைந்த கணேஷ்க்கு, பொள்ளாச்சி அரசு மருத்துமவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சூலுார் போலீசார் விசாரித்து மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது, கோவை எஸ்.சி. - எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி விவேகானந்தன், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பார்த்திபன், ஈஸ்வரனுக்கு தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மதிவாணன் இறந்து விட்டதால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பாலசுப்பிரமணியன் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !