நீரோடையில் தடுப்பில்லை: குப்பை கொட்டுவதால் பாதிப்பு
நெகமம்: நெகமம், சிறுகளந்தை நீரோடையில் அதிகளவு குப்பை கொட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் மாசடைந்து உள்ளது. நெகமம் அருகே, சிறுகளந்தையில் ரோட்டோரம் வளைவு பகுதியில் நீரோடை உள்ளது. இந்த நீரோடை அருகே, இருக்கும் ரோட்டில் தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இந்த நீரோடையில் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. இதில், மக்கள் பலர் பிளாஸ்டிக் குப்பை மற்றும் இதர கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் தண்ணீர் மாசுபடுவதுடன், அருகிலுள்ள விளைநிலம் பாதிக்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நீரோடை அருகே ரோட்டோரத்தில் சிறிது துாரத்துக்கு மட்டுமே தடுப்புகள் உள்ளது. முழுமையாக தடுப்புகள் அமைக்காததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டுநர்கள் இவ்வழியாக செல்லும்போது நிலை தடுமாறி, நீரோடையில் விழுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் நீரோடையில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அகற்றம் செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோட்டோரத்தில் நீரோடை பகுதி முழுவதும் தடுப்பு அமைக்க வேண்டும். நீரோடையில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.