கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் ஒளிராத மின்விளக்குகள்
வால்பாறை; வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. நகரப்பகுதியில் மட்டும் ஐந்து இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, அட்டகட்டி, காடம்பாறை, ரொட்டிக்கடை, முடீஸ், கவர்க்கல், வாட்டர்பால்ஸ், சோலையார்டேம், கருமலை, அக்காமலை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியிலும் மினி உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், வால்பாறை எஸ்டேட் பகுதியில் இரவு நேரத்தில் காட்டுயானை, காட்டுமாடு, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் முகாமிடுகின்றன. இரவு நேரங்களில் பெரும்பாலான எஸ்டேட்களில் தெருவிளக்குகள் எரியாததால், தொழிலாளர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.இந்நிலையில், வால்பாறை கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் கடந்த சில நாட்களாக உயர்கோபுர மின்விளக்கு மற்றும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட தெருவிளக்குகளும் எரியவில்லை. இதனால், இரவு நேரங்களில் மக்கள் அவதிப்படுகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் கடந்த சில நாட்களாக, இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதில்லை. தங்கும் விடுதிகள் நிறைந்த இந்தப்பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகின்றனர். நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும்,' என்றனர்.