கிளை நுாலகத்தை தரம் உயர்த்துங்க! குமரலிங்கம் மக்கள் கோரிக்கை
குமரலிங்கம், ; குமரலிங்கம் கிளை நுாலகத்தை முழு நேர நுாலகமாக தரம் உயர்த்தி, அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் மாவட்ட நுாலக ஆணைக்குழுவுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கத்தில், மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கீழ், கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகத்தில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தரம் உயர்த்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள மனு:கடந்த, 1955ல், குமரலிங்கத்தில், கிளை நுாலகம் துவக்கப்பட்டு, 1991ல் இருந்து, நுாலகம் சொந்த கட்டடத்தில், இயங்கி வருகிறது.தற்போது, இந்நுாலகத்தில், 4 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களும், 70க்கும் மேற்பட்ட புரவலர்களும், 30 ஆயிரத்துக்கும் அதிகமான நுால்களும் உள்ளன.போதிய இடவசதி இல்லாததால், நுால்களை படிப்பதற்கு பயன்படுத்த முடியாமல், கட்டி வைக்க வேண்டிய நிலை உள்ளது. வாசகர்கள் காற்றோட்டமான சூழ்நிலையில் அமர்ந்து படிப்பதற்கான இடமும், தேவையான தளவாடங்களும் இல்லை.சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், அதிகளவு பயன்படுத்தும் நுாலகத்தை, காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை செயல்படும் முழு நேர நுாலகமாக தரம் உயர்த்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்.ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.இப்பகுதியில், முழு நேர நுாலகம் எதுவும் இல்லாததால், பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். மேலும், நுாலகத்தில் பாதுகாப்பான குடிநீர் வசதி, கழிப்பிட வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும்.நுாலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டி, நாளிதழ் மற்றும் பருவ இதழ்களை வாசகர்கள் படிக்கும் அறையாக மாற்ற வேண்டும். இதுகுறித்து நீண்ட காலமாக மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.