தாராளமாக பயன்படுத்தலாம் யு.பி.ஐ., பரிவர்த்தனை; ஜி.எஸ்.டி., அச்சம் தேவையில்லை என்கிறார் ஆடிட்டர்
கோவை: சிறு வர்த்தகர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோர் யு.பி.ஐ., பரிவர்த்தனை மேற்கொண்டால் ஜி.எஸ்.டி., நோட்டீஸ் வரும் என அச்சப்படத் தேவையில்லை; தாராளமாக பயன்படுத்தலாம் என, ஆடிட்டர் விளக்கமளித்துள்ளார்.இதுதொடர்பாக, கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜலபதி கூறியதாவது:டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில், உலகளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. மாதத்துக்கு ரூ. 24 லட்சம் கோடி மதிப்பிலான 1,800 கோடி பரிவர்த்தனைகள் நடக்கின்றன. ஆனால் கடந்த 2, 3 மாதங்களாக நம் அண்டை மாநிலங்களில் சிறு வர்த்தகர்கள், தெருவோர வியாபாரிகள் யு.பி.ஐ., பரிவர்த்தனைகளைக் குறைத்து வருகின்றனர். அதிக பணப் பரிவர்த்தனை செய்தால், ஜி.எஸ்.டி.,யில் இருந்து நோட்டீஸ் அனுப்புவார்கள் என அஞ்சுகின்றனர். ஜி.எஸ்.டி., பற்றிய போதிய புரிதல் இல்லாததே காரணம். ஜி.எஸ்.டி., பதிவு சேவைப் பிரிவில் உள்ளவர்கள், ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரையும், வர்த்தகர்கள் ரூ.40 லட்சம் வரையும் பரிவர்த்தனை செய்தால், ஜி.எஸ்.டி.,செலுத்த தேவையில்லை. அதற்கு மேல் சென்றால்தான் ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டும். அதிலும் ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வரை பரிவர்த்தனைக்கு, காம்போசிட் திட்டத்தின் கீழ் வெறும் 1 சதவீத வரி செலுத்தினால் போதும்.ஆண்டுக்கு ரூ.1.5 கோடி என்றால், அதிகபட்சம் ரூ.1.5 லட்சம்தான் வரும். இவ்வளவு பெரிய வர்த்தகத்துக்கு, இது பெரிய தொகை அல்ல. வர்த்தகம் செய்பவர்கள், தங்களின் தனிப்பட்ட வரவு செலவை, சேமிப்புக் கணக்காக வைத்துக் கொள்ளலாம். வர்த்தகத்துக்கு தனியாக ஒரு நடப்புக் கணக்குத் துவங்கி, அதில் யு.பி.ஐ., பரிவர்த்தனைகளை மேற்கொண்டால், எவ்வித சிக்கலும் இல்லாமல், கணக்கு காண்பிக்க முடியும். யு.பி.ஐ., வாயிலாக கடன் வாங்கியிருந்தால், அதற்கெல்லாம் ஜி.எஸ்.டி., செலுத்த தேவையில்லை. நீங்கள் செய்வது சேவையா, பிற வர்த்தகமா எனப் பாருங்கள். கடந்த 2 ஆண்டுகளில் யு.பி.ஐ., பரிவர்த்தனையின் வருடாந்திர அளவைப் பாருங்கள். உச்சபட்ச விலக்கைத் தாண்டினால் மட்டும் ஜி.எஸ்.டி., பதிவு செய்தால் போதும். https://www.youtube.com/embed/btQ5jo6GyA0ஜி.எஸ்.டி., பதிவு செய்து, முதலாண்டில் ரூ.50 லட்சம் பரிவர்த்தனை வரை இருந்தால், அதில் ரூ.40 லட்சத்துக்கு எதுவும் செலுத்தத் தேவையில்லை. ரூ.10 லட்சத்துக்கு 1 சதவீதம் செலுத்தினால் போதும். ஜி.எஸ்.டி., பதிவு செய்யாமல், ஏமாற்ற நினைத்து, துறை அதிகாரிகள் கண்டறிந்தால், மொத்தத் தொகைக்கும் 18 சதவீதம் விதித்து வசூலிப்பர். இது தேவையற்ற சிக்கல். ஜி.எஸ்.டி., பதிவு செய்வதும் மிக எளிதான நடைமுறைதான். எனவே, யு.பி.ஐ.,யை அச்சமின்றி தாராளமாக பயன்படுத்தலாம். தவிர, ஜி.எஸ்.டி., பதிவு வைத்திருந்தால், வங்கிக் கடன்கள், அரசின் திட்டங்கள், மானியங்களை எளிதில் பெற முடியும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
வருமான வரி செலுத்தணுமா?
“வருமான வரி, ஜி.எஸ்.டி., என்றாலே அதிக வரி செலுத்த வேண்டும் என அஞ்சத் தேவையில்லை. ஏற்கனவே கூறியபடி, ரூ.1.5 கோடி பரிவர்த்தனை நடப்பதாகக் கொண்டால், அவை முற்றிலும் ஆன்லைன் பரிவர்த்தனையாக இருந்தால், நீங்கள் வேறெந்த கணக்கும் காண்பிக்கத் தேவையில்லை.அந்தத் தொகையில் 6 சதவீதத்தை வருவாயாகக் காட்டி, அதற்கு வருமான வரி செலுத்தினால் போதும். ரூ.1.5 கோடியில் 6 சதவீதம் என்பது ரூ. 9 லட்சம்தான். தற்போது ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு, வருமான வரி செலுத்தத் தேவையில்லை,” என்றார் ஆடிட்டர் ஜலபதி.