கோவை : கோவை மாவட்டத்தில் செயல்படும் உணவு சார்ந்த நிறுவனங்களில், நான்கு மாதங்களில், 2.45 லட்சம் லிட்டர் பயன்படுத்திய எண்ணெய் சேகரிக்கப்பட்டு, 'பயோ டீசல்' உற்பத்திக்கு அனுப்பப்பட்டுள்ளது. சமையலுக்கு ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால், அதிலுள்ள அமிலத்தன்மை குறைந்து, காரத்தன்மை அதிகரிக்கிறது. அதுபோன்ற எண்ணெய் வாயிலாக தயாரிக்கப்படும் உணவுகளை உட்கொள்ளும்போது, அதிக ரத்த கொழுப்பு சேர்ந்து இதயம், வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. இதை தடுக்க, இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தால், 'ரூக்கோ' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்துள்ள முகவர்கள் வாயிலாக, உணவு நிறுவனங்களிடம் பயன்படுத்திய எண்ணெய் தினமும் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வகையில், கோவை மாவட்டத்தில் ஸ்டார் ஹோட்டல்கள், உணவகங்கள், இனிப்பகங்கள் என, 444 உணவு சார்ந்த நிறுவனங்கள் இணைக்கப்பட்டு, பழைய எண்ணெய் சேகரிக்கப்படுகிறது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
உணவு தயாரிப்பில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள், ஹோட்டல்கள் பயன்படுத்திய எண்ணெய்களை சிறிய ஹோட்டல்கள், சாலையோர கடைகளுக்கு வழங்கி விடுகின்றன. இதை தடுக்க, பதிவு செய்யப்பட்ட முகவர்கள் வாயிலாக சேகரிக்கப்படுகிறது. கோவையில் 5 பதிவு செய்யப்பட்ட முகவர்கள் உள்ளனர். 444 உணவு நிறுவனங்களிடம் இருந்து மாதந்தோறும் சராசரியாக 48 முதல் 53 டன் பயன்படுத்திய எண்ணெய் சேகரிக்கப்படுகிறது. நான்கு மாதங்களில், 2.45 லட்சம் லிட்டர் எண்ணெய் 'பயோ டீசல்' உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளது. உணவு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்யும்போது, தினமும் பயன்படுத்தும் எண்ணெய், பயோ டீசலுக்கு வழங்கிய எண்ணெய் சார்ந்த பதிவேட்டை ஆய்வுக்கு உட்படுத்துகிறோம். இவ்வாறு, கூறினார்.
2வது முறை பயன்படுத்த செக்!
கோவையில் பெரிய உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் எண்ணெய்யை, சிறிய ஹோட்டல்கள், மெஸ், சாலையோர காளான் கடைகள், சிக்கன் கடைகள், பானிப்பூரி தயாரிப்பில் ஈடுபடும் நபர்கள் மற்றும் சிறிய இனிப்பகங்களுக்கு குறைந்த விலைக்கு வாங்கி, பயன்படுத்தி வந்தனர். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் உபயோகித்து தயாரிக்கும் உணவுகளை உட்கொண்டால், உடல் நல குறைவு ஏற்படும். இதை தடுக்கவே பயன்படுத்திய எண்ணெய் சேகரிக்கப்பட்டு, பயோ டீசல் தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் பழைய எண்ணெய் மீண்டும் பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், வீடாக இருந்தாலும் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால், இதய நோய், வயிறு சார்ந்த நோய்கள் ஏற்படும், என, உணவுப் பாதுகாப்பு துறையினர் எச்சரிக்கின்றனர்.