லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
தொண்டாமுத்துார்:கோவையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிடிக்க சென்றபோது, லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த வி.ஏ.ஓ.,வை, சஸ்பெண்ட் செய்து, கோவை தெற்கு ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.கோவை மாவட்டம், பேரூர் தாலுகா, மத்வராயபுரம் வருவாய் கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வந்தவர் வெற்றிவேல், 35. இவரிடம், தொம்பிலிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி,65 என்பவர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், சான்றிதழ் வழங்க, வெற்றிவேல், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இவ்வளவு தொகை கொடுக்க முடியாது என, கிருஷ்ணசாமி கூறியபோது, 500 ரூபாய் மட்டும் குறைத்துவிட்டு, மீதி, 4,500 ரூபாய் தந்தால் மட்டுமே, வாரிசு சான்றிதழ் வழங்குவேன் என, வி.ஏ.ஓ., வெற்றிவேல் கூறியுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், கிருஷ்ணசாமி புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, முதல்கட்டமாக, 1,000 ரூபாயை, வெற்றிவேலிடம் கொடுத்துள்ளார். மீதமுள்ள தொகையான, 3,500 ரூபாய், ரசாயனம் தடவிய பணத்தை, கடந்த, 14ம் தேதி, பேரூரில் வைத்து கிருஷ்ணசாமி, வெற்றிவேலிடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வாங்கிய வெற்றிவேல், தனது சட்டை பாக்கெட்டில் வைத்துபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட வெற்றிவேல், தனது இரு சக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்றார். சிறிது தூரம் சென்றபோது, லஞ்சப் பணத்துடன் பேரூர் பெரியகுளத்தில் குதித்தார். பின்னால் துரத்தி சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் குளத்தில் இறங்கி வெற்றிவேலை பிடித்து, ஒரு நாள் முழுவதும் விசாரணை செய்தனர். ஆனால், லஞ்சப்பணத்தை, வெற்றிவேல், குளத்தில் சேற்றுப் பகுதியில் புதைத்து வைத்துவிட்டார். மாயமான லஞ்ச பணத்தை, இரண்டு நாளாக போலீசார் தேடியும் கிடைக்கவில்லை. கடந்த, 15ம் தேதி, வி.ஏ.ஓ., வெற்றிவேலை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து, கோவை தெற்கு ஆர்.டி.ஓ., ராம்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகலை, சிறையில் உள்ள வெற்றிவேலிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வழங்கினர்.