உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எல்லையில் உள்ள செக்போஸ்ட்களில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு

எல்லையில் உள்ள செக்போஸ்ட்களில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு

பொள்ளாச்சி: ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் எதிரொலியாக, கோவை-, கேரள சோதனை சாவடிகளில், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பது குறித்து, கால்நடை கோவை மண்டல இணை இயக்குனர் பார்வையிட்டார். கேரள மாநிலம், கோட்டயம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பன்றிப் பண்ணைகளில் வைரஸ் பாதிப்பால், பன்றிகள் இறப்பு ஏற்பட்டது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொள்ளாச்சி அருகே தமிழக எல்லையான நடுப்புணி, கோபாலபுரம், மீனாட்சிபுரம், ஜமீன்காளியாபுரம், செம்மணாம்பதி, வடக்குக்காடு, வீரப்பகவுண்டன்புதுார் ஆகிய ஏழு இடங்களில், கால்நடைத்துறையினரால் வாகன சோதனை நடத்தப்படுகிறது. அதன்படி, கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளித்த பின் அனுமதிக்கப்படுகிறது. நேற்று, கால்நடைத்துறை கோவை மண்டல இணை இயக்குனர் மகாலிங்கம், சோதனை சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிட்டார். வாகன சோதனை பணியில் உள்ளவர்களிடம், 'பன்றிகள், தீவனங்கள், பண்ணை சார்ந்த பொருட்கள், உணவு கழிவுகள் எடுத்து வரும் வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. வாகனங்களுக்கு முறையாக கிருமி நாசினி தெளித்த பின்னரே அனுமதிக்க வேண்டும்,' என்றார். அவருடன், கால்நடைத்துறை துணை இயக்குனர் சரவணன், உதவி இயக்குனர் சக்ளாபாபு, டாக்டர் ஆதில், மோகனவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி