மேலும் செய்திகள்
கலெக்டரிடம் கரியாம்பாளையம் மக்கள் சரமாரி புகார்
05-Apr-2025
அன்னுார்: அன்னுார் அருகே, கரியாம்பாளையத்தில், தனியார் தொழிற்சாலை ஆறு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் வாசத்தால், வாந்தி, மூச்சு திணறல் ஏற்படுகிறது, என, பொதுமக்கள் இரண்டு ஆண்டுகளாக புகார் கூறி வந்தனர். இந்நிலையில் முத்தரப்பு கூட்டம் நேற்றுமுன்தினம் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., கோவிந்தன், தாசில்தார் யமுனா, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் அபூபக்கர், தனியார் தொழிற்சாலை அதிகாரிகள் மற்றும் கரியாம்பாளையம் கிராம மக்கள் பங்கேற்றனர்.கிராம மக்கள் கூறுகையில்,' தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் வாசத்தால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. பலர் இதனால் நோய்வாய்ப்பட்டுள்ளனர். சிலர் வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர் சென்று விட்டனர்,' என சரமாரியாக புகார் தெரிவித்தனர். கூட்ட முடிவில் ஆர்.டி.ஓ., கோவிந்தன் பேசுகையில், ''மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஒரு வாரத்திற்குள் தொழிற்சாலை பகுதியில் ஆய்வு செய்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதுவரை தொழிற்சாலை மாலை 6:00 மணிக்கு பிறகு இயங்கக்கூடாது,'' என்றார்.'ஒரு வாரத்திற்கு பிறகு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும்,' என வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
05-Apr-2025