ரயில்வே கேட் வழித்தடத்தை அடைக்க கூடாது! கிராம மக்கள் மனு கொடுத்து வலியுறுத்தல்
பொள்ளாச்சி; திவான்சாபுதுார் - வடக்கு பாறை மேடு ரயில்வேகேட் வழித்தடத்தை அடைக்கும் பட்சத்தில், கோவிந்தாபுரம் சாலையை நேரடியாக அடைவதற்கு, வழித்தடம் அமைத்துத்தர வேண்டும் என, மக்கள் மனு கொடுத்து வலியுறுத்தினர்.பொள்ளாச்சி சப்--கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யா, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது உரிய தீர்வு காண்பதற்காக துறை சார்ந்த அலுவலர்களிடம் மனுக்கள் ஒப்படைக்கப்பட்டன. அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.முகாமில், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, பட்டா, நிலம் அபகரிப்பு, அடிப்படை வசதிகள் என, பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி மனு அளித்தனர்.* ஆனைமலை அடுத்த, திவான்சாபுதுார் வடக்கு பாறை மேடு கிராம மக்கள், சப்-கலெக்டர் கேத்ரின் சரண்யாவிடம் மனு அளித்தனர். அதில், கூறியிருப்பதாவது:வடக்கு பாறை மேடு கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கிராமத்திற்கு செல்லும் மக்கள், கேரள மாநிலம் மீனாட்சிபுரம் அருகே உள்ள நெல்லிமேடு பகுதி வழியாக, திவான்சாபுதுார் - வடக்கு பாறை மேடு ரயில்வேகேட் வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், பயன்பாட்டில் உள்ள ரயில்வே கேட் தடம் மூடப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்கு மாற்றுப்பாதை அமைத்தால், சுமார், 2 கி.மீ., துாரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். முதியர்வர்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் பாதிக்கப்படுவர்.ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மாற்றுப்பாதை அமைக்கப்படுவதால், பாதுகாப்பற்ற சூழல் நிலவும். எனவே, ரயில்வே கேட் தடத்தை மூட அனுமதிக்கக் கூடாது. இல்லையெனில், அதற்கு மாற்றாக மேம்பாலம் அல்லது கோவிந்தாபுரம் பிரதான சாலையை நேரடியாக அடைவதற்கு வழித்தடம் அமைத்துத் தர வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.* தன்னார்வலர் பூபதி அளித்த மனுவில், 'வேட்டைக்காரன்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு, அழுக்கு சுவாமியார் கோவில் வீதியில், புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், முறையாக அமைக்கப்படாததால், அதில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வருகிறது. சப்-கலெக்டர் நேரடியாக சாலையை ஆய்வு செய்து, துறை ரீதியான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளார்.* வால்பாறை ரொட்டிக்கடையை சேர்ந்த ஈஸ்வரி கொடுத்த மனுவில், 'ரொட்டிக்கடையில் உள்ள வீட்டு நிலத்தை அபகரிக்க, தனியார் காட்டேஜ் உரிமையாளர்கள் முயற்சிக்கின்றனர். இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., முதல்வரின் தனிப்பிரிவுக்கு தபால் வாயிலாக புகார் மனு அனுப்பினேன்.வால்பாறை போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து, குடியிருக்கும் நிலத்துக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்,' என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என, துறைரீதியான அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.