பார்வை குறைபாடு யானை உடலில் ரத்த காயங்கள்; சிகிச்சையளிக்க வனத்துறை முடிவு
பாலக்காடு; பாலக்காடு அருகே, பார்வை குறைபாடுள்ள ஆண் காட்டு யானையின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா, கஞ்சிக்கோடு, வாளையார் ஆகிய வன எல்லையோர குடியிருப்பு பகுதிகளில், ஆண் காட்டு யானை சுற்றி வருகிறது. வயலில் பயிரை சேதப்படுத்திய யானையை, வனத்திற்குள் விரட்டினாலும், மீண்டும் குடி யிருப்பு பகுதிக்கு திரும்பி வருகிறது. இதையடுத்து, வனத் துறையினர் நடத்திய பரிசோதனையில், 32 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் காட்டு யானைக்கு பார்வை குறைபாடு இருப்பது தெரிந்தது. அதனால், யானைக்கு சிகிச்சை அளிக்க வனத் துறையினர் முடி வெடுத்தனர். கடந்த, ஆக. 7ம் தேதி மலம்புழா மாத்துருத்தி பகுதியில், யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கண்களுக்கு சிகிச்சை அளித்தனர். அதன் பின், யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க, 'ரேடியோ காலர்' பொருத்தி, அடர்ந்த வனத்தில் விட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் யானையை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இந்த யானை உடலில் காயங்களுடன் காணப்பட்டது. இது குறித்து, வனத்துறையினர் கூறியதாவது: யானையின் உடலில், ரத்த கசிவுடன் மூன்று காயங்கள் ஏற்பட்டுள்ளன. வனத்தில் மற்ற யானைகள் தாக்கியதில் ஏற்பட்ட காயங்களாக இருக்கலாம். இது தவிர, சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளன. தற்போது, வேலஞ்சேரி வனத்தில் அந்த யானை உள்ளது. யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம். இவ்வாறு கூறினர்.