உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி நகராட்சி பகுதிகளில், குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற கோரி, நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. கருமத்தம்பட்டி நகராட்சியில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 27 வார்டுகள் உள்ளன. தி.மு.க., வை சேர்ந்த மனோகரன் தலைவராக உள்ளார். இங்கு தினமும் டன் கணக்கில் குப்பை சேகரிக்கப்படுகிறது. குப்பை அகற்ற தனியார் நிறுவனம் உள்ளது. ஆனால், கடந்த ஒரு மாதமாக குப்பை சரிவர அகற்றப்படுவதில்லை, என, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆளும் கட்சி கவுன்சிலர்களே கூறினால் கூட, குப்பை அகற்றப்படுவதில்லை எனவும் புகார்கள் உள்ளன. இந்நிலையில், குப்பையை அகற்ற கோரி, ஐந்தாவது வார்டு கவுன்சிலர் தங்கமணி (தி.மு.க.,) தலைமையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், பழனிசாமி உள்ளிட்டோர் நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். ஆளும் கட்சி கவுன்சிலரே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கூறுகையில்,' நகராட்சியின் பல பகுதிகளில் மாதக்கணக்கில் குப்பை குவிந்து கிடக்கிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. பலரும் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குப்பை அகற்ற நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை. சுகாதார ஆய்வாளருக்கு போன் செய்தால் எடுப்பதே இல்லை. அதனால், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, குப்பைகள் அகற்றும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி