அரசு மருத்துவமனையில் காத்திருப்போர் கூடம் திறப்பு
கோவை: கோவை அரசு மருத்துவமனையில், காத்திருப்போர் கூடம், 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நேற்று பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், இக்கூடத்தை திறந்துவைத்தார்.எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறியதாவது:பிரசவத்திற்கு செல்லும் பெண்களின் உறவினர்களுக்கு பயன்படும் வகையில், காத்திருப்பு கூடம் பிரசவ அறைக்கு அருகில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டுள்ளது.இம்மருத்துவமனையில், இடப்பற்றாக்குறை என்பது கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. டாக்டர்களின் வாகனங்களை நிறுத்தக் கூட, இடம் இல்லாத சூழல் உள்ளது.சட்டசபை கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பியதற்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைத்துத் தர, அரசு உத்தேசித்து இருப்பதாக பதில் அளித்தார். ஆனாலும், இங்குள்ள பல கட்டடங்கள் பழமையானவை; அவற்றை அகற்றிவிட்டு அடித்தளத்தில் பார்க்கிங் வசதிகளுடன், பெரிய கட்டடங்கள் எழுப்பினால், பல நோயாளிகள் பயன்பெற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.மருத்துவமனை டீன் நிர்மலா, பொதுப்பணித்துறை அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.
பேச்சு அருவருக்கத்தக்கது'
எம்.எல்.ஏ., வானதி கூறுகையில், ''தி.மு.க., உறுப்பினர்களின் பேச்சுக்கள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளன. மாநில முதல்வரே பேச்சை சகிக்க முடியாமல், கட்சி பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தை அணுக மாநில அரசுக்கு உரிமை இருப்பது போல், மாநில கவர்னருக்கும் உண்டு. கவர்னர் துணை குடியரசுத்தலைவரை பார்ப்பதும், சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதும் அவரவர் முடிவு.பா.ஜ., கட்சியின் இலக்கு என்பது, 2026ல் தி.மு.க., அரசு அகற்றப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கவேண்டும் என்பது தான். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும்; தற்போதே அதற்கான நம்பிக்கை வந்துவிட்டது. ஜெயிக்க நினைப்பவர்கள் எங்கள் கூட்டணிக்கு வந்துவிடுவார்கள்,'' என்றார்.