வீடுகளுக்குள் வந்து விடுகிறது கழிவு நீர்! இடையர்பாளையம் பகுதி மக்கள் அவஸ்தை
கால்வாய் வசதி வேண்டும்
பீளமேடு, சவுரிபாளை யம் பிரதான சாலையில் கால்வாய் வசதி இன்மையால், அப்பகுதிகளில் மழைநீர், கழிவு நீருடன் சேர்ந்து முற்றிலும் தேங்கி, வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மேலும், மழை அதிகரிக்கும் என்பதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - கலையரசி, சவுரிபாளையம். பாதுகாப்பு கேள்விக்குறி
ஆர்.ஜி.மகால் சாலையில், அம்பாள் நகர் அருகே குடிநீர் குழாய் பணி மேற்கொள்ளப்பட்டு சரியாக அக்குழிகள் மூடப்படவில்லை. எங்கள் பகுதியில் சாக்கடை வசதிகள் இன்மையால், மழை நீர் குழிகளில் தேங்கிவிடுகின்றன. மழை நேரங்களில் குழந்தைகள் அதில் விழுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.- பிரசன்னா, சேரன்மாநகர். பொது கழிப்பிடம் அபாயம்
பெரியநாயக்கன்பாளையம் 10வது வார்டு, அண்ணாநகர் பகுதியில் உள்ள மலக்கசடு எரிவாயுக்கலன் மிகுந்த அபாயகரமான நிலையில் உள்ளது. பயன்பாடு அற்ற கலனை, உடனடியாக பத்திரமாக அப்புறப்படுத்த வேண்டும். இப்பகுதியை சுற்றி புதர்மண்டி கிடப்பதால், விஷ ஜந்துகள் வருவதுடன், சமூக விரோத சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அபாயகரமான நிலையில் உள்ள கழிப்பிடத்தையும் அப்புறப்படுத்தவேண்டும். - தண்டாயுதபாணி, பெரியநாயக்கன்பாளையம். நாய்கள் தொல்லை
கோவை குனியமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள, பாரதி நகர் பகுதியில் நாய்கள் அதிகம் உள்ளன. இரவு நேரங்களில் வாகனங்களை துரத்தி செல்வதால், அச்சமாக உள்ளது. குழந்தைகள் தெருக்களில் விளையாட முடிவதில்லை. - நிஜாம் பாஷா, குனியமுத்துார். விழும் நிலையில் மரம்
கோவை ராம்நகர், அன்சாரி வீதியில் விழும் நிலையில் பட்டுபோன மரம் உள்ளது. தற்போது பெய்யும் பலத்த மழையால், மரம் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராமலிங்கம், ராம்நகர். மைதானம் முழுவதும் மாடுகள்
ஆனைகட்டி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் மாடுகள் தங்கும், மேயும் இடமாக மாற்றப்பட்டுள்ளதால், மாணவர்கள் அச்சத்துடன் இருக்கவேண்டிய நிலை உள்ளது. விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத சூழல் தொடர்கிறது. - ராஜா, ஆனைகட்டி வீடுகளில் புகும் கழிவுநீர்
தடாகம் ரோடு, இடையர்பாளையம் பகுதியில், சாக்கடை பணிகள் சரியாக முடிக்காமல் பாதியில் விட்டு, ஓராண்டு கடந்துவிட்டது. சாக்கடை கழிவுகள் செல்வதற்காக அமைக்கப்பட்ட தொட்டியும் மூடப்படாமல், அதில் செல்லும் தண்ணீரும் வெளியேற முடியாமல், திறந்த வண்ணம் உள்ளது. மழை சமயங்களில் வீடுகளுக்குள் கழிவுகள் வந்துவிடுகின்றன.- கனகராஜ், இடையர்பாளையம். குப்பையால் அவதி
கோவை, 22வது வார்டு சேரன்மாநகர் பகுதியில், பள்ளி, கோவில், மருத்துவமனை ஆகியவை உள்ள இடத்தில், மலை போல் குப்பை தொடர்ந்து குவிக்கப்படுகிறது. நாய்கள் குப்பையை தெரு முழுவதும் பரப்பிவிடுகின்றன. மழை நேரங்களில் சாலையில் நடக்க முடிவதில்லை. குப்பை சரிவர அகற்றப்படுவதும் இல்லை.- கிரிஜா, சேரன்மாநகர். பாலம் ஷட்டர் பழுது
திருச்சி சாலை பெர்க்ஸ் ஆர்ச் வளைவில் உள்ள, பாலத்தின் அடியில் ஷட்டர் பழுதாகியுள்ளது. இதை ஒரு வாரத்திற்கு முன்பே, அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்காமல் விட்டதால், தற்போது பெய்த மழையில், அப்பகுதி முழுவதும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டது. - குடியிருப்பு வாசிகள். வழியெல்லாம் குப்பை
பீளமேடு முதல் ஆவாரம்பாளையம், இளங்கோ நகர் செல்லும் வழியில், வார்டு 28ல் பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் தேங்கியுள்ளது. பலமுறை சுகாதார மற்றும் துாய்மை பணியாளர்களிடமும் கூறியும் பலன் இல்லை. அப்பகுதி அருகிலேயே மூன்று பள்ளிகள் உள்ளன. பிரதான சாலையில் குப்பை தேங்கி இருப்பதால் சிரமமாக உள்ளது. - ஸ்ரீனிவாசன், பீளமேடு.