உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் தொட்டி சீரமைப்பு பாதியில் நிறுத்தம்; சேடல்டேம் பகுதி மக்கள் அதிருப்தி

குடிநீர் தொட்டி சீரமைப்பு பாதியில் நிறுத்தம்; சேடல்டேம் பகுதி மக்கள் அதிருப்தி

வால்பாறை; வால்பாறை அருகே, குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால்,சேடல் டேம் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.வால்பாறை அடுத்துள்ளது சோலையார் டேம். இங்குள்ள சேடல்டேம் பகுதியில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு, வால்பாறை நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.ஆனால், பாதுகாப்பற்ற குடிநீர் சப்ளை செய்வதால், இப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு போராட்டத்திற்கு பின் குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், திடீரென்று அந்தப்பணியும் நிறுத்தப்பட்டதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சி, 8வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சேடல்டேம் உள்ளது. நகராட்சி சார்பில் இப்பகுதியில் எந்த வளர்ச்சிப்பணியும் முறையாக செய்வதில்லை. பல இடங்களில் தெருவிளக்குகள் கூட எரிவதில்லை.பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட திறந்தவெளி குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாமல், சேறும், சகதியுமாக உள்ளது. மேலும், திறந்தவெளியில் குடிநீர் தொட்டி அமைந்துள்ளதால், வன விலங்குகள் குடிநீர் தொட்டியில் விழுந்தால் கூட தெரிவதில்லை.இதனிடையே, இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில், தற்போது அந்தப்பணியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, சேடல்டேம் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும், குடிநீர் தொட்டியை சீரமைத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். மழை காலத்துக்கு முன்பாக, குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணியை செய்து முடிக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.

விரைவில் துவங்கும்!

இதுபற்றி, வார்டு கவுன்சிலர் இந்துமதியிடம் கேட்ட போது, ''சேடல் டேம் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடக்கிறது. தடுப்பணையை சுற்றிலும், 'ரிங் வால்வு' கட்டுவதற்கு பதிலாக தடுப்புச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.''பணியை ஒப்பந்ததாரர் முறையாக செய்யாததால், பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு செய்த பின், சேடல் டேம் பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில், பணிகள் விரைவில் துவங்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ