தர்பூசணியில் செயற்கை ரசாயனம் இல்லை: அதிகாரிகள் கள ஆய்வில் உறுதி பழங்களை தாராளமாக வாங்கி பயன்படுத்த அறிவுரை
மேட்டுப்பாளையம்; தர்பூசணி பழங்களின் நிறம் மற்றும் சுவைக்காக எவ்வித செயற்கை ரசாயனமும் செலுத்தப்படவில்லை என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வதந்திகளை நம்பாமல் அதிக சத்துள்ள தர்பூசணி பழத்தை மக்கள் உட்கொண்டு பயன் பெற வேண்டும். விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைக்கும்.கோவை மாவட்டத்தில் தர்பூசணி 105 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விதைக்கப்பட்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அறுவடைக்கு வரும். இப்பழத்தில் கலப்படம் செய்யப்படுவதாக வதந்தி பரவியது.இதையடுத்து, வேளாண்மை உற்பத்தி கமிஷனர் மற்றும் தோட்டக்கலை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், மாவட்ட அளவிலான தோட்டக்கலை துறை அதிகாரிகளை உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு அதன் உண்மை நிலையை தெரிவிக்க உத்தரவிட்டனர். இதன்படி, கோவையில் மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.இதுகுறித்து, கோவை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சித்தார்த்தன் கூறியதாவது:-உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து ரசாயன ஆய்வுக்கு தர்பூசணி உட்படுத்தப்பட்டது. அதில் தர்பூசணி பழங்களின் நிறம் மற்றும் சுவைக்காக எவ்வித செயற்கை ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமுள்ளதால் கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. மேலும், நம் உடலின் நீர்ச்சத்தின்மையை போக்குகிறது. இதில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, சி, பி1, பி6 போன்ற நுண்ணுாட்ட சத்துக்களும், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகளவில் உள்ளதால் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு சுக்ரோஸ் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் எவ்வித தயக்கமுமின்றி உட்கொள்ளலாம்.தர்பூசணி பழத்தில் இயற்கையாகவே லைகோபீன் எனப்படும் இயற்கை மூலப்பொருள் உள்ளதால் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. மஞ்சள் நிற தர்பூசணி பழத்திற்கு பீட்டா கரோட்டீன் எனப்படும் சுரபி காரணம். லைகோபீன், பீட்டா கரோட்டீன் நமது கண்பார்வைத் திறனை அதிகரிக்கிறது. கண்புரை நோயிலிருந்து பாதுகாக்கிறது.இதுதொடர்பாக, பொதுமக்களிடையே தோட்டக்கலை துறையின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வதந்திகளை நம்பாமல், பொதுமக்கள் அனைவரும் தர்பூசணியை உண்டு பயனடையலாம். இதன் வாயிலாக விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த தர்பூசணிக்கு உரிய விலை கிடைக்கப்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.