உள்ளூர் செய்திகள்

சொல்றத சொல்லிட்டோம்!

 பொதுஇடத்தில் கழிவு கொட்டினால் நடவடிக்கை கழிவுநீர் வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கைபொள்ளாச்சி, செப். 30-'பொள்ளாச்சி நகராட்சி கழிவுநீர் அகற்றும் வாகனங்களில் இருந்து, பொது இடங்களில் கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிப்பு, உரிமம் ரத்து செய்தல் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.பொள்ளாச்சி நகராட்சியில், சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், பதிவு செய்யப்பட்ட கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.நகராட்சி கமிஷனர் கணேசன் பேசியதாவது:கழிவுநீர் அகற்றும் வாகனங்களை, நகராட்சியில் பதிவு செய்து உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் பெற்றவர் தவிர, வேறு எந்த நபரும் நகராட்சி பகுதியில் கழிவுநீரை அகற்றும் வாகனங்கள் இயக்குவது விதிகளுக்கு முரணானது. நகராட்சியில் உரிமம் பெற்றவரின் வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

பாதுகாப்பு வழிமுறை

உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து, பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணியாளர்கள், இயந்திரங்கள் வாயிலாக மட்டுமே கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும்.உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன், அந்த கருவி செயல்படுவதையும் எந்த இடையூறு இல்லாமல் தொடர்ந்து தரவுகளை அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும்.பணியாளர்களுக்கு, 10 லட்சத்துக்கு குறையாமல் காப்பீடு செய்து அதன் நகலை நகராட்சிக்கு சமர்பிக்க வேண்டும்.

கட்டணம் செலுத்தணும்!

பதிவு செய்யப்பட்ட கழிவுநீர் வாகனங்கள், நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை ஊற்றுவதற்காக, நகராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத்தை தவறாமல் மாதந்தோறும், 5ம் தேதிக்குள் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.மாதாந்திர கட்டணம் செலுத்தாத வாகனங்கள் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுவது தெரியவந்தால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.கழிவுநீர் அகற்றும் வாகனங்களை, காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை பகல் நேரங்களில் மட்டுமே இயக்க வேண்டும். இரவு நேரங்களில் எக்காரணம் கொண்டும் கழிவுநீர் வாகனங்களை இயக்கக்கூடாது.

காப்பீடு அவசியம்

ஒவ்வொரு வாகனத்துக்கும், தனிப்பட்ட முறையில் தினசரி விபரப்பதிவேடு பராமரிக்க வேண்டும். அனைத்து வாகனங்களும் உரிய தகுதிச்சான்று காப்பீடு மற்றும் டிரைவர்கள், பணியாளர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற டாக்டரிடம் மருத்துவ தகுதிச்சான்று பெற்று இயக்க வேண்டும்.கட்டணமில்லா அலைபேசி எண், '14420'ல் தகவல் தெரிவித்த பிறகே, கழிவுநீர் அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டும். நகராட்சி பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணிக்கு செல்லும் போது, சுகாதாரப்பிரிவில் அதற்கான பதிவேட்டில் பதிவு செய்து நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.கழிவுநீர் வாகனங்களில் அகற்றப்பட்ட கழிவுகளை, நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், பதிவேட்டில் பதிவு செய்து அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே ஊற்ற வேண்டும்.எக்காரணம் கொண்டும் பொது இடங்களில் ஊற்றக்கூடாது. அவ்வாறு ஊற்றினால் சட்டத்துக்கு புறம்பான செயல் என கருதி, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, தக்க மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி விதிகள், 2023ன் படி, இந்த விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால் முதல் முறை குற்றத்துக்கு, 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது மற்றும் தொடர் குற்றங்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து, உரிமம் ரத்து செய்யப்படும்.வழிமுறைகளை பின்பற்றி வாகன உரிமையாளர்கள், நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, பேசினார்.கழிவுநீர் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் இந்த அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை