அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்கணும்!
வால்பாறை,; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வால்பாறையில் உள்ள, அங்கன்வாடி மையங்களில், 2 - 5 வயது வரையிலான குழந்தைகள் கல்வி பயிலும் வகையில், 43 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. அங்கன்வாடி மையங்களில், 720க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.இந்நிலையில், வால்பாறை நகரில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலருக்கான அலுவலகம் இல்லை. நிரந்தர கட்டடம் இல்லாததால், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான தங்கும் விடுதி தற்காலிக அலுவலகமாக செயல்படுகிறது.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் பெரும்பாலான அங்கன்வாடி மையங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. மையத்திற்கு நிரந்தர கட்டடம் இல்லாததால், அதிகாரிகள், பணியாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குழந்தைகள் அதிக அளவில் சேர்ந்து படிக்கும் வகையில், எஸ்டேட் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நகராட்சி சார்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். நகரின் மத்தியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் கட்ட, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.